• Sat. Oct 11th, 2025

விந்தணு குறைபாடா? நிவர்த்தி செய்ய இதோ எளிய வழிகள்!

Byadmin

Aug 31, 2025

பல லட்ச விந்தணுக்களுக்கு மத்தியில் சண்டையிட்டு முதன்மையாக வந்ததாலே இன்று நாம் இருக்கிறோம். ஆக குழந்தை பெற்றுக் கொள்ள தேவைப்படும் முக்கிய கூறே ஆண்களின் விந்தணுவே. அவை வீரியமிக்கவையாக இருந்தால் தானே குழந்தைகளை பெற்றெடுக்க முடியும். ‘அந்த காலத்து ஆள், அதான் கல்லு மாதிரி இருக்கான்’ என்று பலரும் சொல்லி கேட்டிருப்பீர்கள். உண்மை தான், ஆரோக்கியமாக இருந்த காரணத்தினால் தான் அக்காலத்தில் பல குழந்தைகளை பெற்றெடுத்தனர். ஆனால் இன்றோ நிலைமை மாற்றிக் கொண்டிருக்கிறது. மாசு, சுகாதாரமற்ற சூழ்நிலை, உடல் ஆரோக்கியம் என பல பல காரணத்தினால் நாம் ஆரோக்கியமாக இருப்பதில்லை. அதனால் தான் என்னவோ விந்தணுவும் திடமாக பலருக்கு இருப்பதில்லை. இப்போது குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடுகிறீர்களா? சரி, உங்களுக்கு உங்கள் விந்தணுவின் ஆரோக்கியத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டால், அதனை ஊக்குவிக்கும் வழிகள் அவசியமாகும்.

ஆரோக்கியமான விந்தணுவை பெற சில எளிய வழிகள்!

ஜிங்க் உணவுகள்

விந்தணுவை திடமாக மாற்ற நினைப்பவர்களை வால்நட்ஸ் உண்ண பரிந்துரைக்கின்றனர் மருத்துவர்கள். வால்நட்ஸ்களில் ஜிங்க் உள்ளதால் அது உங்கள் ஆண்மை இயக்குநீர் (டெஸ்டோஸ்டிரோன்) செயல்முறையை மேம்படுத்த உதவும். இதனால் விந்தணு அசையுந்தன்மையும் சீராகும். ஜிங்க் உள்ள கடல் சிப்பி, வாழைப்பழங்கள் மற்றும் பாதாம்களையும் கூட உண்ணலாம்.

வைட்டமின் சி, ஈ மற்றும் டி நிறைந்த உணவுகள்

விந்தணு குறைபாட்டை நிவர்த்தி செய்ய வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு மற்றும் ஸ்ட்ராபெர்ரிகள் உதவும். மேலும் டி.என்.ஏ-வை பாதிப்படையாமால் காக்கும். கீரை, வெண்ணெய் போன்ற வளமையான வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை உட்கொண்டால், கருத்தரித்தலின் வீதத்தை மேம்படுத்தி விந்தணுவின் தரத்தை ஊக்குவிக்கும். ஆரோக்கியமான வைட்டமின் டி உணவுகளை உட்கொண்டால், குறிப்பாக நீந்தும் விந்தணு நன்றாக மேம்படும். எக்காரணத்திற்காகவும் பாஸ்ட் ஃபுட் உணவுகளை உட்கொள்ள கூடாது.

ஜிம்மிற்கு செல்லுங்கள்

ஜிம்மிற்கு செல்வது தசைகளையும், உடலையும் வளர்ப்பதற்கு மட்டும் கிடையாது. தீவிரமான உடற்பயிற்சிகளின் மூலம் ஆண்மையியக்குநீர் அளவை மேம்படுத்த உதவும். இது உங்கள் விந்தணு தரத்தை அதிகரிக்கும். அதனால் உடற்பயிற்சியில் ஈடுபடுவதை தவிர்க்காதீர்கள்.

புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள்

மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிற ஒன்று தான் இது. ஆனால் இந்த அறிவுரையை கேட்காமல் நடந்தால் பாதிக்கப்பட போவது நீங்கள் தான். உங்கள் விந்தணு டி.என்.ஏ-வை புகை பாதிக்கும். அதனால் விந்தணு குறைபாடுகள் ஏற்படும். சரி, நீங்கள் புகைப்பிடிக்காமல், புகைப்பிடிப்பவர்களின் அருகில் இருந்தால் தீங்கு எதுவும் நேராது என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அந்த தவறான கருத்தை உடனே நீங்கள் அழித்து விட வேண்டும். பார் போன்ற இடங்களுக்கு சென்றால் பல திசைகளில் இருந்தும் புகை கிளம்பும். இது உங்களை கட்டாயமாக பாதிக்கும்.

பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுங்கள்

ச்லாமிடியா மற்றும் கானாரியா போன்ற சில தொற்றுக்கள் உங்கள் விந்தணு எண்ணிக்கைகளுடன் நேரடியாக தொடர்பை கொண்டுள்ளது. இவையனைத்தும் உடலுறவு மூலமாக பரவும் நோய்களாகும். இவைகளை தடுக்க ஒரே வழி தான் உள்ளது – அது தான் பாதுகாப்பான உடலுறவு. அதனால் உங்கள் காமத்தை கட்டுப்படுத்தி, உங்களுடன் படுக்க நினைக்கும் அனைவருடனும் உடலுறவு வைத்துக் கொள்ள எண்ணாதீர்கள். மேலும் எப்போதும் ஆணுறை உபயோகப்படுத்த மறக்காதீர்கள்.

விதைப்பை சூடாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்

இணையதளத்தை பயன்படுத்தவோ அல்லது படம் பார்க்கவோ உங்கள் லேப்டாப் என்னும் மடிக்கணினியை மடியில் வைத்துக் கொண்டு எவ்வளவு நேரம் படுத்துக் கொண்டே அதனை செய்வீர்கள்? அப்படி செய்கையில், மடிக்கணினியின் சூடு நேரடியாக உங்கள் விதைப்பையை அடையும். உங்களுக்கு திடமான விந்தணு வேண்டுமானால், இது கண்டிப்பாக அதை நிறைவேற்ற விடாது. ஏன், சூடான கார் இருக்கையில் அமர்வது கூட ஆபத்தே.

குறிப்பு

மேற்கூறியவைகளை தவிர, அளவுக்கு அதிகமான மன அழுத்தத்தை கொண்டிருக்க கூடாது. அதே போல் அளவுக்கு அதிகமான உடற்பயிற்சியையும் செய்யக் கூடாது. கருவளம் என்பது விலைமதிப்பில்லா சொத்தாகும். அதனால் அதனை காப்பது அவசியமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *