• Tue. Oct 14th, 2025

“ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியிடம் பழங்குடியினத் தலைவர் கருத்து தெரிவிப்பு

Byadmin

Jan 9, 2022

“ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதிச் செயலணிக்கு, பழங்குடியினத் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோ கருத்துத் தெரிவித்தார்.

“ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதிச் செயலணி, தற்போது ஊவா மாகாண மக்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்து வருகிறது. 

இம்மாதம் 06 ஆம் திகதியன்று மஹியங்கனை பழங்குடிக் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்த செயலணியினர், அதன் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோவிடம் இருந்து, பழங்குடியின மக்களைப் ரதிநிதித்துவப்படுத்தி கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டனர்.

“ஒரே நாடு ஒரே சட்டத்தை” ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதிக்கு பலம் இருக்கின்றதெனத் தாம் நம்புவதாகக் கூறிய வன்னில அத்தோ, எந்தத் தடைகள் ஏற்படினும், அவற்றைக் கடந்து இப்பணியில் வெற்றிபெற ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.

ஜனவரி 08 ஆம் திகதியன்று பதுளை மாவட்டச் செயலகத்தில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

ஜனாதிபதிச் செயலணி முன்னிலையில் கருத்துத் தெரிவித்த திருமதி ஹஷீனா, தான் இஸ்லாமிய சட்டப்படி திருமணம் செய்து கொண்டதாகவும் பதுளை காதியார், எந்தவித அறிவிப்புமின்றி தனது கணவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்றுக் கொடுத்ததாகவும் கூறினார்.

இஸ்லாமியப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றிப் பேச ஆளில்லை என்றும் தம்மீது அக்கறை காட்ட எவரும் இல்லாததால், “ஒரே நாடு ஒரே சட்டம்” திட்டத்தை நடைமுறைப்படுத்துவது முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

ஊவா வெல்லஸ்ஸ சுதந்திரப் போரில் முன்னணி வகித்த பிரித்தானிய ஆட்சியாளர்களால் காணி உரிமை பறிக்கப்பட்ட பல தலைமுறைகளின் பிரதிநிதிகள், நாட்டின் காணிச் சட்டம் இன்னமும் நியாயமாக அமுல்படுத்தப்படவில்லை என்றும் வெளிநாட்டுப் படையெடுப்புகளில் இருந்து நாட்டைக் காப்பாற்ற முன்வந்த தமது குடும்பங்கள் மற்றும் அதன் விளைவாகச் சொத்துக்களையும் உயிர்களையும் இழந்த தமது குடும்பங்களுக்கு, சுதந்திரத்துக்குப் பின்னராக இதுவரை காலமும், எந்தவித நியாயமும் கிடைக்கவில்லை என்று ஜனாதிபதிச் செயலணியின் முன்னிலையில் எடுத்துரைத்தனர்.

நாட்டில் வாழும் ஏனைய மக்களுக்குக் கிடைக்கும் உரிமைகளைப் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் அனுபவிப்பதில்லை. இது தொடர்பில் அனைத்துத் தரப்பினரும் கவனஞ்செலுத்த வேண்டும். 

அதேபோன்று, தோட்டப் பகுதிகளில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினையாகக் காணிப் பிரச்சினை காணப்படுவதாக, பல தோட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் செயலணியிடம் தெரிவித்தனர்.

“ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதிச் செயலணியின் தலைவர் ராஜகீய பண்டித வண. கலகொடஅத்தே ஞானசார தேரர், உறுப்பினர்களான பேராசிரியர் சாந்திநந்தன விஜேசிங்ஹ, சிரேஷ்ட விரிவுரையாளர் சுமேத வீரவர்தன, சட்டத்தரணி சஞ்சய மாரம்பே, எரந்த நவரத்ன, பானி வேவல, ஆகியோருடன் ஜனாதிபதிச் செயலணியின் செயலாளர் ஜீவந்தி சேனாநாயக்க உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *