• Sun. Oct 12th, 2025

மனித வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?

Byadmin

Jan 28, 2022

“என்னுடைய சமூகத்தாரே! இவ்வுலக வாழ்க்கையெல்லாம் அற்ப சுகம்தான்; அன்றியும் நிச்சயமாக, மறுமையோ – அதுதான் (என்றென்றுமிருக்கும்) நிலையான வீடு. (திருக்குர்ஆன் 40:39).

ஆசைகளும், பேராசைகளும் மனிதனை அழிக்கும் உயிர்க் கொல்லியாகும். இதுமட்டுமின்றி பாவங்களின் முதல் காரணகர்த்தாவும் இவையே. அதன் நிழல்களைக் கூட அணுகத் தடை செய்கிறது இஸ்லாம். இந்த வாழ்க்கை என்பது பயணம்தான், யாரும் இவ்வுலகில் தங்கி வாழ்பவர் அல்ல. வழிப்போக்கன் போல், சில காலம் தங்கி மறுபடியும் மறுமை நோக்கி பயணிப்பதுதான் நம் வாழ்வின் நோக்கமாகும்.

இம்மை வாழ்வை விட மறுமை வாழ்வு நிலையானது என்கிறது இஸ்லாம். மறுமை வாழ்விற்கான முன்னோட்டம்தான் இவ்வாழ்க்கை. இது, நிரந்தரமற் றது என்பதில் உறுதியாக இருக்கிறது இஸ்லாம். இதனை குர்ஆன் மற்றும் நபி மொழிகள் கோடிட்டுக் காட்டுகின்றன.

“என்னுடைய சமூகத்தாரே! இவ்வுலக வாழ்க்கையெல்லாம் அற்ப சுகம்தான்; அன்றியும் நிச்சயமாக, மறுமையோ – அதுதான் (என்றென்றுமிருக்கும்) நிலையான வீடு. (திருக்குர்ஆன் 40:39).

உலகில் நீ (தாய் நாடு அல்லது சொந்த ஊர் அல்லாத ஓரிடத்தில் வாழும்) ஓர் அந்நியனைப் போல் அல்லது ஒரு வழிப்போக்கனைப் போல் வாழ்வாயாக!’ மண்ணறைவாசிகளை போல் உன்னை நினைத்துக்கொள். உமரின் மகனே! நீ காலைப் பொழுதை அடைந்தால் மாலையை எதிர்பார்க்காதே. நீ மாலையை அடைந்தால் காலையை எதிர்பார்க்காதே. நோயின் பாதிப்புகளுக்கு முன்னால் ஆரோக்கியத்தையும், மரணத்தைச் சந்திப்பதற்காக வாழ்வையும் பயன்படுத்திக் கொள். ஓ அப்துல்லாஹ், நாளை உன் நிலை என்ன என்பது நீ அறியமாட்டாய்’’ என்றார்கள் நபி (ஸல்). (நூல்: திர்மிதி)

உலகத்தின் மையக்கரு என்ன என்பதை இந்த நபிமொழி தெள்ளத் தெளிவாகப் பேசுகிறது. இதனை புரிந்து கொண்டோர்களுக்கு அமைதியான நதியில் மிதக்கும் இலை போன்று வாழ்க்கை அமையும். இந்த உலகத்தின் சாராம்சத்தை அறிய முற்படாமல் மன இச்சைக்கு அடிமையானால், அலையில் சிக்கிய படகு போல் நிம்மதியின் கயிறு அறுந்து நிறம் மாறிப்போகும்.

“அவர்கள் இந்த உலக வாழ்விலிருந்து (அதன்) வெளித்தோற்றத்தையே அறிகிறார்கள் – ஆனால் அவர்கள் மறுமையைப் பற்றி அலட்சியமாக இருக்கிறார்கள்”. (திருக்குர்ஆன்: 30:7.)

இந்த உலகம் வெறும் அலங்காரம் என்பது, வாழும் காலத்தில் நமக்கு புலப்படாது.‌ மரணிக்கும் நேரத்தில் முழுமையாகப் புலப்படும். அப்போது அது பயன் தராது.

அறிந்து கொள்ளுங்கள்: “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப்படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; (உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையான வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு – ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை’’. (திருக்குர்ஆன் 57:20)

ஜனனம், மரணம் இவை இரண்டிற்கும் மத்தியில் உள்ள பயணமே வாழ்க்கை. தீமையான காரியங்களை விட்டு நம் மனதைத் தூரம் போகச் செய்யவேண்டும். இங்கு எதுவும் நிரந்தரமில்லை என்பதை அறிவதில், இம்மை மற்றும் மறுமையின் சந்தோஷங்கள் தொடர் கின்றன.

ஏ.எச். யாசிர்அரபாத் ஹசனி, 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *