ஹிஜாப் விவகாரத்தையொட்டி கர்நாடகாவில் அனைத்துஉயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அடுத்த 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
இதை முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார்.கர்நாடகாவில் உள்ள உடுப்பி, சிவமோகா, சிக்மக்ளூர், மங்களூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர திடீர் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் ஹிஜாப் அணிந்து கொண்டு கல்வி நிறுவனங்களுக்குள் முஸ்லீம் மாணவிகள் வந்தால் நாங்களும் காவி துண்டு அணிவோம் என கூறி இந்துத்துவா மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
தங்கள் உரிமைகளுக்காக முஸ்லிம் மாணவிகள் பள்ளி வாயிலில் அமர்ந்து போராடி வருகிறார்கள்.ஹிஜாப்புடன் அனுமதி இல்லைபோராட்டத்தில் கலந்து கொள்ளும் மாணவிகள் ஹிஜாப்புடன் உள்ளே வந்து கழிவறைகளை பயன்படுத்தவும் எதிர்ப்பு இருப்பதாக மாணவிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
இந்த நிலையில் சிவமோகாவில் மோதல்கள் முற்றுவதால் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் கர்நாடகாவில் பெரும்பாலான மாவட்டங்களில் பதற்றம் நீடித்து வருகிறது.
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து கொண்டு கல்லூரிக்குள் வந்த ஒரு மாணவியை இந்துத்துவா மாணவர்கள் கழுத்தில் காவி துண்டு அணிந்து கொண்டு ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டனர். ஆனாலும் அந்த மாணவி அவர்களை எல்லாம் ஒற்றை ஆளாக சமாளித்து உள்ளே சென்றார்.
அது போல் சிவமோகாவில் ஒரு கல்லூரியில் தேசியக் கொடியை இறக்கிவிட்டு காவி கொடியை ஒரு மாணவர் ஏற்றிய சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல பள்ளிகள், கல்லூரிகளில் கல் வீச்சு சம்பவங்களும் அதிகரித்துவிட்டன. இந்த விவகாரம் கையை மீறி சென்றுவிட்டதாக கர்நாடக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளார்கள். கல்வி நிறுவனங்களுக்கு ஒரு வாரத்திற்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில் முதல்வர் பசவராஜ் பொம்மை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் , கர்நாடகாவில் உள்ள மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர், மக்கள் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணி காக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அடுத்த 3 நாட்களுக்கு அனைத்து உயர்நிலைப் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என தனது ட்விட்டரில் கேட்டுக் கொண்டுள்ளார். நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வேளை சனிக்கிழமைகளில் பொது விடுமுறை என்றால் சனி, ஞாயிறுடன் சேர்த்து 5 நாட்கள் விடுமுறை இருக்க வாய்ப்புள்ளது.- என்றார்