கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி இந்த நாட்டிலிருந்து ஏகாதிபத்திய ஆட்சிக்கு நான் முடிவுகட்டினேன். அத்தகைய ஆட்சிக்கு இந்த நாட்டில் மீண்டும் இடம் கிடையாது என திட்டவட்டமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கல்கமுவ பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
முகமூடியைப் போட்டுக்கொண்டு மக்களுக்கு அழகானதொரு உலகைக் காட்டி மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கு சிலர் மேற்கொண்டுவரும் சதித்திட்டங்கள் குறித்து இன்று நாட்டு மக்கள் தெளிவுடன் இருக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசு தோல்வியடைந்த ஓர் அரசு என சுட்டிக்காட்டி, அபிவிருத்தி குறித்து போலியான விம்பங்களை ஏற்படுத்தி வருகின்றவர்கள் அன்று அபிவிருத்தி என்ற பெயரில் மேற்கொண்ட அனைத்து ஊழல், மோசடிகளையும் நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த அரசு தயாராகவுள்ளது.
விவசாய மற்றும் நீர்ப்பாசனத்துறையிலும் விவசாய சமூகத்தின் வாழ்க்கையிலும் பாரிய மாற்றங்கள் ஏற்படும் எனவும் கூறியுள்ளார்.