சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடியமை வரலாற்று ரீதியிலான தவறாகும். வெகுவிரைவில் சுபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்படும்.
எரிபொருள் விலை திருத்தத்தினால் பெற்றோலிய கூட்டுத்தாபனம் இலாபமடையவில்லை. நிவாரண விலைக்கே எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது. மின்னுற்பத்திக்கு எரிபொருள் வழங்க வேண்டும் என்ற காரணத்தினால் டீசல் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றில் வியாழக்கிழமை (5) இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது மின்சாரம் மற்றும் வலுசக்தி துறை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் எழுப்பிய வாய்மொழி மூலமமான கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எரிபொருளின் விலை திருத்தம் கடந்த மாதம் 18ஆம் திகதி செய்யப்படுவதற்கு முன்னர் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நாளாந்தம் 1.6 பில்லியன் நட்டத்தை எதிர்க்கொண்டது.விலையதிகரிப்பை தொடர்ந்து கூட்டுத்தாபனம் எவ்வித இலாபத்தையும் பெறவில்லை.
தற்போதும் நிவாரண விலையின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது.
ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 87 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதால் கூட்டுத்தாபனம் 316 ரூபா நட்டத்தை எதிர்க்கொள்கிறது. டீசல் மற்றும் பெற்றோல் விநியோகத்தில் தொடர்ந்து நட்டத்தை எதிர்க்கொள்கிறோம். புதிய விலை திருத்தத்தினால் பாரிய இலாபத்தை பெற்றொலிய கூட்டுத்தாபனம் அடையவில்லை.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் ஒன்றிணைந்து ஒரு எரிபொருள் விலைசூத்திரத்தை அறிமுகப்படுத்தும் வகையிலான அமைச்சரவை பத்திரம் எதிர்வரும் வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். கடந்த மாதங்களை காட்டிலும் உலக சந்தையில் தற்போது எரிபொருளின் விலை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன.
மே மாதத்திற்கு தேவையான எரிபொருள் கொள்வனவிற்கு 580 மில்லியன் அமெரிக்க டொலர் அவசியமாகுகிறது. இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் இன்னும் 4 கப்பல்களில் எரிபொருள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.
இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் எரிபொருள் கொள்வனவிற்காக கிடைக்கப்பெறும் கடன்தொகையை 500 மில்லியன் அளவு மேலதிகமாக பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.
எரிபொருள் விநியோக கட்டமைப்பில் காணப்பட்ட சிக்கல் நிலைமைக்கு தீர்வு எடுக்கப்பட்ட வேளையில் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தினால் எரிபொருள் வரிசை தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் பௌஸர் தாங்கி சாரதிகள் முன்வைத்த கோரிக்கை நியாயமானதாக அமைந்தாலும் அதனை எம்மால் செயற்படுத்த முடியாத நிதி நெருக்கடி நிலைமை காணப்படுகிறது.
தேவையான அளவு பெற்றோல் கையிருப்பில் உள்ளது.டீசல் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மின்னுற்பத்தி நிலையங்களுக்கு டீசல் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படுவதால் போக்குவரத்து நடவடிக்கைக்கு தேவையான டீசல் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
வழமையான நாட்களில் 4,000 ஆயிரம் மெற்றிக்தொன் டீசல் நாடுதழுவிய ரீதியில் விநியோகிக்கப்படும்,தற்போது மின்னுற்பத்திக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், 1,000-1,500 மெற்றிக்தொன் டீசல் மாத்திரமே விநியோகிக்க முடியும்.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடியமை வரலாற்று ரீதியிலான தவறாகும். வெகுவிரைவில் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்படும் என்றார்.