• Thu. Oct 16th, 2025

மஹிந்தவின் குருணாகல் இல்லம் முற்றாக தீக்கிரை – விமல், பந்துல, கெஹலியவின் வீடுகள் மீதும் தாக்குதல்

Byadmin

May 10, 2022

கொழும்பு, காலிமுகத்திடலை அண்மித்து ‘கோட்டா கோ கம’, ‘மைனா கோ கம’ அமைதிப்போராட்டங்கள் மீது ஆளுங்கட்சி ஆதரவு வன்முறைக் கும்பல் நடாத்திய மூர்க்கத்தனமான தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் பதற்றநிலை தோன்றியுள்ளது.

இந்நிலையில் ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேசசபை, நகரசபை உள்ளிட்ட உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட பிரமுகர்களின் வீடுகள் மீது நாட்டின் பல பகுதிகளிலும் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு சென்று தாக்குதல் நடாத்தி வரும் நிலையில், நிலைமை மோசமடைந்துள்ளது.

இந் நிலையில்  ராஜினாமா செய்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சொந்தமான  குருணாகலில் உள்ள வீடு ஆர்ப்பாட்டக் காரர்களால்  முற்றாக இன்று இரவு தீ வைத்து எரிக்கப்பட்டது.

ஏற்கனவே ரஜபக்ஷக்களின் மெதமுலனையில் உள்ள பரம்பரை வீடும்,  டி.ஏ. ராஜபக்ஷ  ஞாபகார்த்த தூபி உள்ளிட்ட நூதனசாலையும் தகர்க்கப்பட்ட பின்னணியில் குருணாகல் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இதனைவிட, அண்மையில் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின், ஹோகந்தர பகுதியில் அமைந்துள்ள வீட்டின் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.  

இதனைவிட முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவின் இல்லம்,  முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் கண்டி இல்லம் ஆகியனவும் ஆர்ப்பாட்டக்காரர்களின்  தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதுடன் அவ்வீடுகளும் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *