• Mon. May 4th, 2026

மலையக சமூகத்தின நெருக்கடிகள் தீர்க்கப்பட்டால் அதை அனைவருமே வரவேற்க வேண்டும் – ஜீவன்

Byadmin

May 15, 2022

நாட்டில் பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்ற இக்காலகட்டத்தில் மலையக சமூகம் கட்டுக்கோப்பாகவும், ஒற்றுமையாகவும் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளாவது, 

பொருளாதார நெருக்கடி என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானதாகவே அமைந்திருந்ததுஎனினும், மலையக பெருந்தோட்ட  மக்கள் இன்று பொருளாதார நெருக்கடிகளையும், பல்வேறு பிரச்சினைகளையும் எதிர்நோக்குகின்றதை காண்கின்றோம். 

 கட்சி, தொழிற்சங்க பேதம் பார்த்து நெருக்கடிகள் வரவில்லை.  தற்போது நாட்டில் பல அரசியல் மாற்றங்கள் இடம்பெற்றுவரும் இந்நிலையில் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரின் மூலம் நாட்டினதும் எமது மலையக சமூகத்தினதும் நெருக்கடிகள் தீர்க்கப்பட்டால் அதை அனைவருமே வரவேற்க வேண்டும்.

ஏனென்றால், அது தான் தற்போதைய தேவையாக உள்ளது. உதவிகளும், நிவாரணங்களும் கிடைக்கும் போது கட்சி ,தொழிற்சங்க பேதங்களை முன்வைத்து அதை விமர்சிப்பதும் நிராகரிப்பதும் இன்றைய சூழ்நிலையில் புத்திசாலித்தனமாகாது.

இ.தொ.காவானது கடந்த 83 வருடங்களாக மக்கள் நலனிலும் உயர்விலும்  அக்கறை காட்டி வந்த பாரிய  அமைப்பாகும். இதுவரையிலும்  மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் தரப்பினருடன் மாத்திரமே நாம் இணைந்து பயணித்திருக்கின்றோம்.

அதுவே எமது இலட்சியமாகும். மக்களின் பிரச்சினைகள் என்பது அவர்களின் பாதுகாப்போடும் இருப்போடும் தொடர்பு பட்டதாகும். அதை மக்கள் முதலில் புரிந்து கொள்ளல் அவசியம்.

அந்த மக்களின் பிரதிநிதிகளாகிய எம்மக்களுக்கும் ஏனைய கட்சிகள் ,தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகளுக்கும் இப்போதைய காலகட்டத்தில் ஒரு பாரிய பொறுப்பு இருக்கின்றது.  

ஒரே மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் நாம் அம்மக்களுக்கு நிலவுகின்றன ஒரே பிரச்சினைகளையே தீர்ப்பதற்கு தெரிவு செய்யப்பட்டிருக்கின்றோம். கட்சி ,தொழிற்சங்க ரீதியாக  எமக்குள் கொள்கை மற்றும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் மக்களின் பிரச்சினைகள் ஒன்றே என்பதை நான் ஏனைய தரப்பினருக்கு  வலியுறுத்த விரும்புகிறேன்.

ஆகவே மக்களுக்கிடயே அரசியல் ரீதியான பிரிவினைகளை உருவாக்க எவரும் முயற்சி செய்யக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.  

தற்போது தேசிய ரீதியாக பல கட்சிகள் தமது  தரப்பு நிலைப்பாடுகளை முன்வைத்து வருகின்றனர். எமது மக்கள் குறித்து இ.தொ.காவுக்கு கரிசனை உள்ளது.

முதலில் நாம் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்சி பெற வேண்டியுள்ளது. அந்த நிவாரணங்களை  பெற்றுத் தருவதற்கு இந்தியா உட்பட பல நாடுகள் முன்வந்துள்ளன. 

அதற்கு அடுத்த கட்டமாகவே நாம் அரசியல் ரீதியான  மீட்சிக்கான வழிவகைகளை ஆராய்ந்து பொருத்தமான முடிவுகளை எடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

அந்த முடிவுகள் எப்போதும் எமது மக்களுக்கு சாதகமாகவே இருக்கும் அதே வேளை     இ.தொ.காவின்,  மக்கள் கொள்கைகளின் அடிப்படையில் எடுக்கப்படும் தீர்மானங்களாக  இருக்கும். 

ஆகவே அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பது குறித்து நாம் அவதானம் செலுத்தி வருகின்றோம். 

அது வரை எமது கரங்களை பலப்படுத்தும் முகமாக நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால் கட்சி,தொழிற்சங்க பேதங்களை ஒரு பக்கம் வைத்து விட்டு பெருந்தோட்ட  மக்கள் கட்டுக்கோப்பாகவும், ஒற்றுமையாகவும் அமைதியாகவும் நடந்துக்கொள்ளவேண்டியது எமது தார்மீக கடமையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *