• Sun. Oct 12th, 2025

சிற்றுண்டிகளின் விலைகள் மேலும் உயர்வு… தலைசுற்ற வைக்கும் புதிய விலைகள்.

Byadmin

May 26, 2022

கொழும்பு உட்பட நாட்டின் பிரதான நகரங்களில் உள்ள அனைத்து சிற்றுணவகங்களிலும்,சிற்றுண்டிகளின் விலைகள் மீளவும் பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிவாயு நெருக்கடியின் காரணமாக விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சிற்றுணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முட்டை ரொட்டி, பராட்டா, றோல்ஸ், பெட்டிஸ், மரக்கறி ரொட்டி, அப்பம், கறி பனிஸ் உள்ளிட்ட அனைத்து சிற்றுண்டிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், தேநீர், பால் தேநீர் என்பனவற்றின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முட்டை ரொட்டி மற்றும் தோசை என்பனவற்றின் விலை 100 ரூபாவாக அதிகரித்துள்ளது.

பராட்டாவின் விலை 50 ரூபாவாக உயர்வடைந்துள்ளதென சிற்றுணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உணவுப் பொதியின் விலை அதிகரிப்புடன், பொதுமக்கள், காலை உணவாக சிற்றுண்டிகளை உண்பதற்கு பழக்கப்பட்டிருந்தனர்.

எனினும், கறியுடன் முட்டை ரொட்டி ஒன்றின் விலை 150 ரூபாவாகவும், கறியுடன் 3 பராட்டாவின் விலை 200 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கறியுடன் அரை இறாத்தல் பாணின் விலை 170 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

றோல்ஸ், பெட்டிஸ், மரக்கறி ரொட்டி, முட்டை பனிஸ் மற்றும் சீனி சம்பல் பனிஸ் உள்ளிட்ட சிற்றுணடிகளின் விலை 100 ரூபா வரையில் அதிகரிக்க சிற்றுணவக உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, அப்பம் ஒன்றின் விலை 50 ரூபாவாகவும், முட்டை அப்பத்தின் விலை 100 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேநீரின் விலை 50 ரூபாவாகவும், பால் தேநீரின் விலை 100 ரூபாவாகவும் உயர்வடைந்துள்ளது.

மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு, எரிவாயு நெருக்கடி உள்ளிட்ட மேலும் சில பிரச்சினைகள் காரணமாக 65 சதவீதத்திற்கும் அதிகமான சிற்றுணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக, ஐக்கிய தேசிய சுயதொழில்புரிவோரின் வர்த்தக சங்கத்தின் தலைவர் பிரதீப் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *