ஐந்து சிறுவர்கள் ஒன்று சேர்ந்து கடலில் குளிக்கச் சென்றதால் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
நீர்கொழும்பு, கோமஸ்வத்தையைச் சேர்ந்த 17 வயதான அப்துல் ரஸ்சாக் என்ற சிறுவனே பரிதாபகரமாக கடலில் மூழ்கி மரணமடைந்தார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை சிறுவர்கள் ஐந்து பேர் ஒன்று சேர்ந்து நீர்கொழும்பு கடற்கரைப் பூங்கா பகுதியில் கடலில் குளிக்கச் சென்றுள்ளனர். குளித்துவிட்டு மூவர் கரைக்கு வந்துள்ளதுடன் இருவர் பாரிய கடல் அலைக்கு அடிபட்டுச் சென்றுள்ளனர். பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக செயல்பட்டு ஒருவரை மீட்டுள்ளனர். ஒருவர் நீரில் மூழ்கி கீழே சென்றுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. திங்கட்கிழமை காலை 8 மணியளவில் சடலம் அவ்விடத்தில் கற்பாறை மேல் கரைஒதுங்கியுள்ளது.
இப்பகுதியில் குளிக்க வேண்டாம் என அறிவித்தல் பலகையும் போடப்பட்டுள்ளது. விசாரணை நடாத்திய நீர்கொழும்பு பொலிஸார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைந்தனர்.
உயிரிழந்தவருடன் சென்ற நால்வரிடமும் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
பிரேத பரிசோதனையின் பின்னர் பூதவுடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. ஜனாஸா திங்கட்கிழமை மஃரிப் தொழுகையின் பின் நல்லடக்கம் செய்யப்பட்டது.