கலவீட்டுக்கவிராயர் என அனைவராலும் அழைக்கப்படும் கல்ஹின்னையை சேர்ந்த இரு மொழிக் கவிஞர் கலாபூசணம் எம். எச். எம். ஹலீம்தீனின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பெரும் பேரிழப்பாகும் என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம்தெரிவித்தார்.
மறைந்த கவிஞர் ஹலீம்தீன் 80 வது வயதில் நேற்று மு.ப 11.00 மணி அளவில் அவரது இல்லமான கல்ஹின்னையில் மரணம் அடைந்தார். அவரது ஜனாஷா இன்று கல்ஹின்னையில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது அங்கு விஜயம் செய்த முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தமது அனுதாபச் செய்தியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
கவிஞர் ஹலீம்தீனுக்கும் எனக்கும் நீண்ட கால உறவு இருக்கிறது. எந்நேரமும் காலத்தை வீரயமாக்காமல் தமிழ் இலக்கியத் துறையில் ஏதையாவது சாதிக்கத் துடிக்கும் வேட்கையுடன் இயங்கிக் கொண்டிருப்பவர். அந்தவகையில் ஹலீம்தீன், கல்வீட்டுக்கவிராயர், மீலாஹ், அபூபஹ்மி, ஹலீம்தீன், அதிரடியான், கல்ஹின்னை அல்ஹஜர்,, அபூ உம்முஹனா, ஆகிய பெயர்களில் எழுதியுள்ளார். இவரது கவிதைகள் இந்திய சஞ்சிகைளிலும் வெளிவந்துள்ளன.
இவர் இது வரை கவிதை, சிறுவர் பாடல்கள், வரலாறு என்று ஏழு நூல்கள் வெளியிட்டுள்ளார். இவற்றில் 5 தமிழ் மொழிகளிலும் இரண்டு ஆங்கில மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளன. இவருடைய நூல்வெளியீட்டு விழாக்களில் நான் மாகாண அமைச்சராக இருக்கக் கூடிய காலத்தில் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கின்றேன்.
இந்தச் சந்தர்ப்பத்தல் அந்நாரது பிரிவுத் துயரால் ஆழ்ந்து இருக்கின்ற அவரது குடும்பத்திற்கும் உற்றார் உறவினருக்கும் அவரை நேசிக்கின்ற இலக்கிய நல்லுள்ளங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த கவலையையும் துக்கத்தையும் தெரிவிப்பதோடு அந்நாரின் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இவரது கவிதைத் தொகுதியான காலத்தின் கோலங்கள் நூல்வெளியீட்டு விழா கண்டியில் இடம்பெற்றது. மூத்த பத்திரிகையாளர் க. ப. சிவம், அந்தனி ஜீவா போன்றவர்கள் இந்த நூல் வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் இவருக்காக வாழ்த்துக் கவிதையொன்றை வாசிப்பதற்காக எனக்கொரு சந்தர்ப்பம் சந்தார்கள். அதுதான் என்னுடைய முதலாவது கன்னி மேடைக் கவியரங்கு. அன்று முதல் இவரது நட்புக் எனக்கு கிடைத்தது. கண்டி நகரில் பேராதனை வீதியில் அமைந்துள்ள நான் வசித்து வந்த என்னுடைய தாத்தா வீட்டுக்கு அடிக்கடி வருகை தந்து அவரது இலக்கிய அனுபவங்களை என்னுடன் என்னுடைய மச்சானுடனும் அழுத்தமாகப் பகிர்ந்து கொள்வார். இந்தச் சந்தர்ப்பத்தில் அந்த நாட்களை நினைவு கூர்ந்து மூத்த ஊடகவியலாளர் என்ற வகையில் என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்தக் கொள்கின்றேன்.
அன்புடன்
இக்பால் அலி