• Sun. Oct 12th, 2025

இலங்கை அரசுக்கு மக்களின் ஆதரவு குறைவு, அபாய நிலை மேலும் அதிகரிக்கலாம் – Fitch Ratings அறிக்கை

Byadmin

Jul 28, 2022

இலங்கை அரசாங்கம் பாராளுமன்றத்திற்குள் பலம் பொருந்தியதாக தெரிகின்ற போதிலும், மக்களின் ஆதரவு குறைவாகவே காணப்படுவதாக Fitch Ratings நிறுவனம் தெரிவித்துள்ளது.

ராஜபக்ஸ குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகள் அதிகளவில் பாராளுமன்றத்திலும் அரசாங்கத்திலும் காணப்படுவதால், அது மக்களின் எதிர்ப்பிற்கு காரணமாக உள்ளதாக அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டுக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை கடன்களை மீள செலுத்தாத நிலையில் இருந்து மீள வேண்டுமாக இருந்தால், பிரதானமாக ஸ்திரமான அரசாங்கமொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமென சர்வதேச கடன் தரப்படுத்தலை மேற்கொள்ளும் உலகின் பிரதான மூன்று நிறுவனங்களில் ஒன்றான Fitch Ratings நிறுவனம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து சலுகைகளை பெற்றுக்கொள்ளும் விடயத்திலும் தொடர்ந்தும் சவால்மிகு நிலையே காணப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிவாரணப் பொதியொன்று கிடைப்பதென்றால் அதன் பின்னர் அதிகளவில் வரி விதிப்பு மற்றும் அரசாங்கத்தின் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கு செயற்திறனான நாணய மாற்று வீதத்தை செயற்படுத்த வேண்டி ஏற்படுவதாகவும் Fitch Ratings நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது மக்களிடமிருந்து எதிர்ப்புகள் எழுலாம் என சுட்டிக்காட்டியுள்ள அந்நிறுவனம், சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு செல்ல முடியாவிட்டால், இலங்கையின் வெளிநாட்டு நாணய கையிருப்பு தொடர்பில் அபாய நிலை மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாத இறுதியில் இலங்கை எரிபொருள், உணவு , அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மற்றும் மருந்து என்பவற்றை கொள்வனவு செய்வதற்கு இலங்கையிடம் 1.9 பில்லியன் டொலரே காணப்பட்டதாகவும் Fitch Ratings நிறுவனம் கூறியுள்ளது.

சீனாவிற்கு செலுத்த வேண்டிய கடன் தொடர்பிலான கலந்துரையாடல் தீர்மானம் மிக்கதாக அமையும் என கூறும் அந்த நிறுவனம், 2020 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவிற்கு செலுத்த வேண்டிய கடன் சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

கடனை பிற்போடுவது மற்றும் நிவாரணக்காலம் வழங்குவது தொடர்பிலான விடயங்களை சீனா முன்னெடுத்தாலும், இந்த செயற்பாடு கடன் வழங்கும் ஏனைய தரப்புடன் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தையில் சவால் மிக்க நிலைமையை உருவாக்கியுள்ளதாகவும் Fitch Ratings நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *