• Sat. Oct 11th, 2025

ஜப்பான் முன்னாள் பிரதமர் உயிரிழந்தார், துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் கைது

Byadmin

Jul 8, 2022

ஜப்பானின் நாரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக அந்த நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக, நிகழ்ச்சியில் ஒன்றில் ஷின்சோ அபே உரையாற்றியபோது, அவரை பின்புறத்தில் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சுட்டதாகவும், இதனால் அவர் காயமடைந்ததாகவும் என்.ஹெச்.கே ஊடகம் தெரிவிக்கிறது. சுட்ட நபரை பிடித்த போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் ஜப்பானின் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டோக்கியோவின் முன்னாள் ஆளுநர் யோய்ச்சி மசுசோ தனது ட்விட்டர் பக்கத்தில், ஷின்சோ அபே இதய மற்றும் மூச்சு செயலற்ற (Cardiopulmonary arrest) நிலையில் இருந்ததாக தெரிவித்திருந்தார்.

ஷின்சோ அபேவின் சகோதரர் டோக்கியோவில் செய்தியாளர்களிடம் சற்று முன்னர் பேசியபோது, “முன்னாள் பிரதமருக்கு தற்போது மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டு வருகிறது, அவரது உயிரைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று கூறி இருந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி ஷின்சோ அபே உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்சமயம் ஜப்பான் அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் நோபுவோ கிஷி, துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் உள்நோக்கம் எதுவாக இருந்தாலும், இந்தத் தாக்குதல் மன்னிக்க முடியாத செயல் என்று கூறினார்.

ஷின்சோ அபே கழுத்து மற்றும் மார்பில் சுடப்பட்டதாகவும், அவருக்கு உள் இரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் முன்னதாக தெரிவித்தனர்.

கைத்துப்பாக்கிகள் தடை செய்யப்பட்டுள்ள ஜப்பானில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது மிகவும் அரிதான ஒன்றாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *