• Sat. Oct 11th, 2025

அரபு மத்ரஸாக்களுக்கு ஒரே பாடத்திட்டம்..

Byadmin

Jul 21, 2017

பாட­நூல்கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது­ என்கிறார் அமைச்சர் ஹலீம்

நாட்­டி­லுள்ள அனைத்து அரபு மத்­ர­ஸாக்­க­ளி­னதும் கல்வி நட­வ­டிக்­கை­களை வேறு­பா­டு­க­ளின்றி ஒரே பாடத்­திட்­டத்தில் முன்னெடுக்கும் வகையில் புதிய பாட­நூல்கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கா­ரங்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார்.

நேற்­றுக்­காலை அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சம­ய­வி­வ­கா­ரங்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்­பெற்ற குர்ஆன் மற்றும் கிரா அத் மனனப் போட்­டி­களில் வெற்­றி­யீட்­டிய மாணவ மாண­வி­க­ளுக்­கான விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கையிலே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்­து­கையில்; ‘நாட்­டி­லுள்ள அரபு மத்­ர­ஸாக்­களில் வெவ்­வே­றான பாட­வி­தா­னங்­களே போதிக்­கப்­ப­டு­கின்­றன. இதனால் அரபுக் கல்­லூ­ரி­களின் பாட விதா­னங்­களை ஒரு முகப்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. அதனால் அனைத்து அரபு மத்­ர­ஸாக்­க­ளுக்கும் பொது­வா­ன­தொரு பாடத்­திட்டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை, நளீ­மியா கலா­பீடம் மற்றும் இஸ்­லா­மிய கல்வி நிறு­வ­னங்­களின் ஆலோ­ச­னை­க­ளுடன், புதிய பாட நூல்கள் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளன. அவை விரைவில் மத்­ர­ஸாக்­க­ளுக்கு அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன. இதன் பின்பு நாட்­டி­லுள்ள அனைத்து மத்­ர­ஸாக்­க­ளிலும் தனித்­த­னி­யான பரீட்­சை­க­ளின்றி ஒரு பொதுவான பரீட்சையே நடாத்தப்படும். அரபு மத்ரஸாக்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்து வதற்காகவே இத்தீர்மானம் மேற்கொள்ளப் பட்டுள்ளது’ என்றார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், இலங்கையில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சவால்களையும் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் அரசாங்கம் இனங்கண்டு அவை தொடரா வண்ணம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. என்றாலும் எதிர்காலத்தில் முஸ்லிம் எதிர்நடவடிக்கைகள் நடைபெறமாட்டாது என்று கூற முடியாது.

எனவே சவால்களை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். சிறுபான்மை சமூகமான நாம் கடந்தகாலங்களில் பல சவால்களை எதிர்கொண்டோம். பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தோம். பிரச்சினைகளின் போது வீரவசனம் பேசுவதால் அவற்றுக்குத் தீர்வு பெற்றுக் கொள்ள முடியாது.

நாம் இந்நாட்டில் பெரும்பான்மை சமூகத்துடன் கலந்து வாழ்கிறோம். நாட்டின் பல பாகங்களில் சிதறி வாழ்கிறோம். எனவே ஏனைய சமூகங்களுடன் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும். இஸ்லாம் அன்பு, கருணை பற்றி அழகாகக் கூறியுள்ளது. ஏனைய மதங்களை கௌரவிக்கும் மதமாக இஸ்லாம் திகழ்கிறது. ஏனைய மதங்களுடன் நல்லுறவினைப் பேணுவதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளமுடியும்.

குர்ஆனை ஓதுவதுடனும் மனனம் செய்வதுடனும் நாம் நன்மைகளை அடைந்து விடுவதில்லை. குர்ஆனை விளங்கிக் கொள்ள வேண்டும். குர்ஆன் போதித்துள்ள வாழ்க்கை முறை எமது வாழ்க்கையாக அமைய வேண்டும். இஸ்லாமியரின் மொழி அரபு மொழியாகும். இந்நாட்டில் நாம் தமிழ் மொழியே பேசுகிறோம் என்றாலும் அரபு மொழியைக் கட்டாயமாகக் கற்றுக் கொள்ள வேண்டும். சூறாக்களை ஓதுவதுடன் நின்று விடாது அவற்றின் பொருளை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஏனைய மதத்தினருக்கு இடையூறு இல்லாவண்ணம் எமது வாழ்க்கை முறை அமைய வேண்டும். பல்லின சமூகத்தைக் கொண்டுள்ள எமது நாட்டில் அனைத்து மக்களுடனும் கைகோர்ப்பதன்மூலம் ஓர் சமாதான வாழ்க்கை கட்டமைப்பை உருவாக்கிக் கொள்ள முடியும் என்றார்.நிகழ்வில் குர்ஆன், கிராஅத் மனனப் போட்டிகளில் தேசிய ரீதியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

-ARA FAREEL –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *