• Fri. Oct 24th, 2025

கோவக்காய் செடியில் இருந்து நீரிழிவுக்கு புதிய மருந்து – ருகுணு பல்கலைக்கழக ஆய்வுக் குழுவின் கண்டுபிடிப்பு

Byadmin

Sep 21, 2022

இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் குறைக்கும் புதிய மருந்தை ருஹுணு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று கண்டுபிடித்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு கராப்பிட்டியவில் உள்ள பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நேற்று நடைபெற்றது.

அங்கு உரையாற்றிய ஆய்வுக் குழுவின் தலைவரும், மருத்துவ பீடத்தின் உயிரியல் துறை பேராசிரியருமான அனோஜா அத்தநாயக்க,
கோவக்காய் செடியில் இருந்து இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கோவக்காய் இலையில் உள்ள இரசாயன பதார்த்தங்கள் தொடர்பில் நீண்ட கால ஆய்வுக்கு பின்னரே இந்த மருந்தை தயாரிக்க முடிந்துள்ளதாக அவர் தெரிவித்தார். ஆய்வின் முடிவுகளின்படி, கோவக்காய் செடியின் இலைகளில் உள்ள இரசாயன பதார்த்தங்கள் இரத்தத்தில் உள்ள சீனியை குறைக்க வல்லவை என ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். இதனைப் பயன்படுத்தி மருந்து வில்லைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த மருந்து மருத்துவ ஆராய்ச்சிக்கு அனுப்பப்பட்டது. இந்த பரிசோதனை 158 நீரிழிவு நோயாளிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டது. இதில் வெற்றிகிடைத்துள்ளது. இந்த மருந்துக்கான காப்புரிமை பெறப்பட்டுள்ளது என்றும் ஆராய்ச்சியில் இணைந்து கொண்ட ருஹுணு பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானப் பிரிவின் உயிரியல் பேராசிரியர் திலக் வீரரத்ன தெரிவித்தார்.
ருஹுணு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் தலைமையில் எதிர்காலத்தில் இந்த மருந்து வணிக ரீதியாக தயாரிக்கப்படும் என ஆராய்ச்சியில் இணைந்த கலாநிதி பட்டத்தை எதிர்பார்த்துள்ள பியுமி வாசனா தெரிவித்தார். எவ்வாறாயினும் கோவக்காய் இலையில் உள்ள இரசாயனங்கள் கண்டறியப்பட்டு, மருத்துவ ஆராய்ச்சி மூலம் மருந்து தயாரிக்கப்பட்டுள்ள போதிலும், கோவக்காய் செடியை வெறுமனே சாப்பிட வேண்டாம் என மக்கள் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *