டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை அபகரித்த சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றின் பெண் உரிமையாளர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
விசாரணையில், குறித்த பெண் வேறு ஒருவரிடம் வேலைவாய்ப்பு முகவர் பொறுப்பை ஒப்படைத்து, வேலை தேடி வந்தவர்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்திருப்பது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
அங்கு சந்தேக நபர் ஒருவரிடம் 450,000 ரூபாவுக்கு மேல் பெறப்பட்டு டுபாயில் வேலை வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.
ஆனால், வாக்குறுதி அளித்தபடி டுபாயில் தங்களுக்கு வேலை வழங்கப்படவில்லை என மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்காக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.