• Fri. Oct 24th, 2025

ஜனாதிபதியின் வௌிநாட்டுப் பயணம் குறித்த அறிவிப்பு

Byadmin

Sep 25, 2022


உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நாளை அதிகாலை (26) ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு பயணமாகின்றார்.

முதலில் ஜப்பானுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், ஜப்பானின் முன்னாள் பிரதமர் சின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளவுள்ளார்.

இதனையடுத்து ஜப்பானிய பிரதமர், வெளிவிவகார அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.

அதன்பின்னர், ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்களின் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், எதிர்வரும் 28 ஆம் திகதி பிலிப்பைன்ஸ் செல்கின்றார்.இதன் போது பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பொங்பொங் மார்கஸ் (Bongbong Marcos) மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா (Masatsugu Asakawa) ஆகியோருடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் விஜயங்களை நிறைவு செய்துகொண்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி நாடு திரும்புவார். ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, சர்வதேச அலுவல்கள் பணிப்பாளர் தினுக் கொழம்பகே, ஊடக பணிப்பாளர் ஷானுக்க கருணாரத்ன, நிலைபெறுதகு அபிவிருத்தி தொடர்பான பணிப்பாளர் ரந்துல அபேவீர, ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோர் இந்த விஜயத்தில் பங்கேற்கின்றனர்.

இதேவேளை ஜனாதிபதியின் பிலிப்பைன்ஸ் விஜயத்தில் திறைசேரி செயலாளரும் இணைந்து கொள்ள உள்ளார். பிலிப்பைன்ஸ் விஜயத்தில் தினுக் கொழம்பகே மற்றும் ரந்துல அபேவீர பங்கேற்க மாட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *