• Mon. May 4th, 2026

மகள் செலுத்திய கார் விபத்து – தாய், தந்தையுடன் குழந்தையும் மரணம்

Byadmin

Oct 18, 2022

அநுராதபுரம், பாதெனிய வீதியில் இன்று (17) முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 வயதுக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக, நாகொல்லாகம பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று மு.ப. 10.00 மணியளவில் அநுராதபுரத்திலிருந்து பாதெனிய நோக்கி பயணித்த கார் ஒன்று ரிதிபதியெல்ல பிரதேசத்தில் வீதிக்கு அருகில் இருந்த புளியமரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அநுராதபுரம் பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இவ்விபத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

இவ்விபத்தில் 3 வயதுடைய அதிஷ மனுல, சுனந்த வர்ணகுலசூரிய (74), எம்.எம். லீலாவதி (70) ஆகிய மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காரின் ஒரு பகுதி கடுமையாக சேதமுற்ற நிலையில், காயமடைந்தவர்களை வாகனத்தில் இருந்து வெளியே எடுப்பதற்கு சுமார் 20 நிமிடம் வரை போராடியதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்கள் வாரியபொல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிறு குழந்தையும் மேலும் இருவரும் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

உயிரிழந்த குழந்தையின் தாயாரே காரை செலுத்தி சென்றுள்ளதோடு, அவர் அநுராதபுரம் விவசாய சேவைகள் திணைக்களத்தில் கடமையாற்றும் சட்ட உத்தியோகத்தர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் தாய் மற்றும் தந்தை ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்த ஏனையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காரை செலுத்திச் சென்ற பெண்ணும் காயமடைந்த மற்றுமொருவரும் மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாகொல்லாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *