• Sat. Oct 11th, 2025

மறைந்த மன்சூர் அமைச்சரும் கல்முனை நீதிமன்றக் கட்டிடத்தொகுதியும்

Byadmin

Aug 1, 2017

கல்முனை நீதிமன்றம் ஆரம்பத்தில் ஒரு தனிக்கட்டிடத்தில் ஒரு கூரையின் கீழ்தான் இணைந்த மாவட்டம்/நீதவான் நீதிமன்றங்கள்  நெடுங்காலமாக இயங்கி வந்தன. ஆனால் புதிய கட்டிடத்தொகுதியில் இன்று நீதவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம் என மூன்று நீதிமன்றங்கள் வெவ்வேறு கட்டிடங்களில் தனியாக இயங்க வழிவகுத்தவர்தான் அண்மையில் மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம். மன்சூர் அவர்களாகும்.

அந்நாட்களில் மேல் நீதிமன்றம் இங்கு இருக்கவில்லையாயினும் அதற்கான கட்டிடம் எதிர்காலத்தில் வந்தாலும் தேவைப்படும் என்ற எதிர்பார்ப்புடன்தான் அதனை முன்னராகவே கஸ்டப்பட்டு அக்கட்டிடத்தையும் கட்டுவதற்கும் அதற்கான அனுமதியை பெறப்பட்டபாடும் நடைமுறைச்சிக்கலும் அதில் ஏற்பட்ட தடைகளும் ஏராளம் என்பது எங்களைப் போன்றவர்களுக்குத்தான் இன்றும் தெரியும்.

ஏனெனில் எனக்கு இன்றும் நன்றாக ஞாபகம் இருக்கின்றது. அன்றைய காலகட்டங்களில் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளராக இருந்து நான் செயற்பட்டு வந்ததனால் எமது சங்கத்தின் முன்னாள் தலைவர் மறைந்த திரு. வெஸ்லி ரி. கந்தையாக அவர்களுடன் ஏனைய சிரேஸ்ட சட்டத்தரணிகளும் கல்முனை நீதிமன்ற கட்டிட தொகுதி அமைப்பதற்கான ஆரம்ப வேலைகள் பற்றியும் பின்னர் அது திறப்பது சம்பந்தமாகவும் இடம்பெற்ற பல கலந்துரையாடல்களில் பல மாதங்களாக மன்சூர் அமைச்சர் அவர்களை கல்முனையிலும் கொழும்பிலும் கூடவே அன்றைய நீதி அமைச்சராக இருந்த திரு. கே.டபிள்யு. தேவநாயகம் அவர்களையும் அவரின் அமைச்சின் உயர் அதிகாரிகளையும் நாம் சந்திப்பதற்காக பல முறை விஜயம் செய்து இவை பற்றி எடுத்துரைத்து வந்ததன் பலனாகத்தான் இந்த வசதி வாய்ப்புகள் எமக்கு இன்று கிடைக்கப் பெற்றுள்ளது – அல்ஹம்துலில்லாஹ்.

அந்த நிகழ்வுகளில் இக்கட்டிட தொகுதியை அன்று அமைக்க அரசியல் ரீதியில் ஒத்துழைப்பையும், ஒத்தாசையும் உதவியும் புரிந்த மகான்தான் மறைந்த மன்சூர் மந்திரி அவர்கள் என்பதை இத்தருணத்தில் நாம் நன்றியுடன் அன்றும் இன்றும் ஞாபகமூட்ட விரும்புகிறோம். அத்துடன் அவருக்கு நாங்கள் என்றும் நன்றிக்கடன் உடையவராகவும் இருக்க வேண்டும் என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயமாகும். எனவே அவரின் பாவங்களை மன்னித்து ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை அன்னாருக்கு வல்ல இறைவன் வழங்குவானாக என பிரார்த்திப்போம்.

– சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *