• Mon. Apr 6th, 2026

வடகிழக்கு இணைக்கப்படாவிட்டால், தமிழர்களின் தனித்துவம் அழிக்கப்படும் – விக்னேஸ்வரன்

Byadmin

Aug 4, 2017
திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மற்றும் உருவாக்கப்பட்டு தமிழர்களின் தனித்துவ அடையாளங்கள் 20, 25 வருடங்களில் அழிக்கப்படும் என வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியட்டுள்ள அவர்,
வட,கிழக்கு இணைப்பு, சமஷ்டி, சுயாட்சி போன்ற தமிழர்களின் அபிலாஷைகள் புதிய அரசியலமைப்பில் இடம்பெறாது எனவும் தெரிவித்துள்ளார். ஒற்றையாட்சி அரசியல் அமைப்புதான் மீண்டும் வரும். அதன் ஊடாக திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மற்றும் உருவாக்கப்பட்டு தமிழர்களின் தனித்துவ அடையாளங்கள் 20, 25 வருடங்களில் அழிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பாக உத்தியோகபூர்வமான தகவல்கள் எதனையும் நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் நான் இந்த விடயம் தொடர்பாக பேசியதன் அடிப்படையில் அறிந்து கொண்டிருப்பதாவது, சமஷ்டியை சிங்கள மக்கள் எதிர்பார்கள் என்னும் அடிப்படையில் அதனை ஏக்கியறட்ட என சொல்ல பார்கிறார்கள். ஆனால் அதனை ஒற்றையாட்சி எனவும் எடுக்கலாம். குறிப்பாக அதற்கு வியாக்கியானம் கொடுக்கையில் எல்லோரையும் சேர்த்து என அர்த்தப்படுத்த பார்கிறார்கள்.
எனினும் சிங்கள மொழியே முதன்மையானது என்ற அடிப்படையில் ஏக்கியறட்ட என்பது ஒற்றையாட்சி எனவே அர்த்தப்படுத்தப்படும். இந்த நிலையில் ஏக்கியை விட்டு எக்சத் என பாவிக்கும்படி கேட்டிருக்கின்றேன். மேலும் இந்த விடயம் தொடர்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்மந்தனுடன் பேசியபோது அதனால் பாதிப்பில்லை என சொன்னார். ஆனால் தான் நான் மறுத்திருக்கிறேன். எனவே சமஷ்டி இல்லாமல் ஒற்றையாட்சி மீண்டும் கொண்டு வரப்படுமானால் எங்களுடைய தனித்துவங்கள் முழுமையாக அழிக்கப்படும்.
இதற்கு நல்ல உதாரணம் மகாவலி தண்ணீர் வடக்குக்கு வரவில்லை. ஆனால் மகாவலியின் பெயரால் தமிழ் மக்களின் காணிகள் பறிக்கப்பட்டு அவற்றில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டும் விட்டார்கள்.
மேலும் வடகிழக்கு இணைப்பும் இல்லை என்ற நிலையிலேயே நிற்பதாக அறிகின்றேன். அதுவும் எமக்கு ஆபத்தான ஒன்றாகவே இருக்கின்றது என்றும் கூறியுள்ளார். குறிப்பாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சிக்காலத்தில் அம்பாறை மாவட்டத்தை முஸ்லிம் மக்களுக்கும், மட்டக்களப்பு மாவட்டத்தை தமிழ் மக்களுக்கும், திருகோணமலை மாவட்டத்தை சிங்கள மக்களுக்கும் வழக்கலாம் என பேச்சு இருந்தது.
ஆனால் இதன் அர்த்தம் வடக்கு கிழக்கு எந்த காலத்திலும் இணைக்கப்பட கூடாது என்பதே. மேலும் கிழக்கு மாகாணத்தில் கடந்த 30, 35 வருடங்களில் சிங்கள மக்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்திருக்கின்றது. இதன் உண்மை என்னவென்றால் அரசாங்கம் திட்டமிட்டு சிங்கள மக்களை வெளியில் இருந்து கொண்டுவந்து குடியேற்றியதே ஆகும்.
எனவே வடகிழக்கு இணைக்கப்படாவிட்டால் எப்படி கிழக்கு மாகாணம் திட்டமிட்ட குடியேற்றங்களால் நிரப்பபட்டதோ அப்படியே வடமாகாணமும் நிரப்பபடும். இதனால் தமிழர்களின் தனித்துவம் முழுமையாக 20, 25 வருடங்களில் அழிக்கப்படும். மேலும் சுயாட்சி இல்லாவிட்டால் எங்களுடைய தனித்துவம் முழுமையாக அழிக்கப்படும்.
நாங்கள் வேறு கலாச்சாரம், பண்பாடு ஒன்றை எதிர்கொள்ள நேரிடும். எனவே வடகிழக்கு இணைப்பு மற்றும், சமஷ்டி, சுயாட்சி போன்ற தமிழ்களின் அபிலாஷைகள் இல்லாத புதிய அரசியலமைப்பு தமிழ் மக்களுக்கு தீமையையே பெற்று கொடுக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *