• Sun. Oct 12th, 2025

பைக் வாங்க வீட்டை பாதி விலைக்கு விற்ற மகன்.. பெற்றோர் எடுத்த முடிவு..

Byadmin

Aug 14, 2023

மத்திய சீனாவில் உள்ளது ஹேனன் பிராந்தியம். இங்கு தனது பெற்றோருடன் வசித்து வந்தவர் 18-வயது ஜியாவோஹுவா (Xiaohua). இவருக்கு அவரது பாட்டனார் வழியாக ஒரு பூர்வீக சொத்து கிடைத்திருந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.5 கோடிக்கும் ($1,39,000) மேலிருக்கும். ஜியாவோஹூவா ஒரு மோட்டார்சைக்கிள் வாங்கி தர சொல்லி நீண்ட காலமாக தனது பெற்றோரை கேட்டு வந்தார். ஆனால் அவர்கள் வாங்கி தர மறுத்தனர். எப்படியாவது மோட்டார்சைக்கிள் வாங்க வேண்டுமென நினைத்த ஜியாவோஹுவா ஒரு விபரீத திட்டம் தீட்டினார். இதற்காக தாத்தா மூலம் பெற்ற தனது சொத்தை தனது பெற்றோருக்கு தெரியாமல் விற்க முடிவு செய்தார். அதன்படி சொத்துக்களை விற்கவும், வாங்கவும் ஏற்பாடு செய்யும் முகவர்களை ரகசியமாக அணுகினார். தனது பூர்வீக சொத்தை பாதி விலைக்கு விற்க ஒரு முகவரிடம் விலை பேசி ஒப்புக்கொண்டார். பாதி விலைக்கு அந்த சொத்தை வாங்கிய அந்த முகவர் குறுகிய காலத்தில் லாபம் சம்பாதிக்க மற்றொரு முகவருக்கு அதிக விலைக்கு விற்று விட்டார். பிறகு ஒரு நாள், ஜியாவோஹுவாவின் தாயாருக்கு வீடு பாதி விலைக்கு விற்கப்பட்டது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த அவர் அந்த சொத்து முகவர்களை அணுகி, விற்பனையை ரத்து செய்யுமாறு கோரினார். ஆனால் அவர்கள் மறுத்தனர். இதனால் வேறு வழியில்லாத நிலையில் ஜியாவோஹுவாவின் பெற்றோர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்து, அவர்கள் மீது வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கு நீதிமன்றத்திற்கு வந்த போது, இதனை விசாரித்த நீதிபதி, விவரங்களை அறிந்து விற்பனை சம்பந்தமான பத்திரங்களை ஆய்வு செய்தார். முகவர்களுக்கும், விற்பனை செய்தவர்களுக்குமான உரையாடல்களையும் ஆய்வு செய்ததில் ஜியாவோஹுவா, தனது சொத்தின் உண்மையான மதிப்பை அறியாமல் இருந்திருப்பதும், அவரை முகவர்கள் ஏமாற்றியுள்ளதும் தெரிய வந்தது. இதனையடுத்து ‘ஜியாவோஹுவாவின் செய்கை சிறு பிள்ளைத்தனமானது’ என வர்ணித்த நீதிமன்றம், இந்த விற்பனையை ரத்து செய்து, சொத்தை மீண்டும் ஜியாவோஹுவாவிற்கே திருப்பி அளித்தது. இந்த செய்தியையடுத்து, ஒரு மோட்டார்சைக்கிளுக்காக எந்த எல்லைக்கெல்லாம் இளைஞர்கள் செல்கிறார்கள் என பெற்றோர்கள் கவலை தெரிவித்து பேசி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *