• Sun. Oct 12th, 2025

முஸ்லிம் கூட்டமைப்புதான் எனது ஒரே இலக்கு

Byadmin

Aug 22, 2017

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் மீண்டும் என்னை இணைப்பதற்கான எந்த முயற்சிக்கும் நான் துளியும் இடமளியேன் என்றும் முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்க விடயத்தில் மும்முரமாகவுள்ளேன் எனவும் தூய முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளருமான எம்.ரி.ஹசனலி தெரிவித்துள்ளார்.

ஹசனலிக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கி, முஸ்லிம் கூட்டமைப்பு உருவாவதைத் தடுப்பதற்கான காய்நகர்த்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஈடுபட்டுள்ளதாக வெளியான செய்தி தொடர்பில் ஹசனலியிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இந்த இணைப்பு விவகாரம் தொடர்பில் எவரும் என்னுடன் எத்தகைய பேச்சும் நடத்தவில்லை. இன்று கட்சி உள்ள நிலையில் நான் மீண்டும் அதனுடன் இணைந்துகொள்வேன் என்பதற்குத் துளியும் இடமில்லை என்பதை உறுதிபடத் தெரிவிக்கின்றேன்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் அம்பாறை மாவட்டத்துக்கான அரசியல் அதிகாரம் மலினப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, அம்பாறை மாவட்டம் பெற்றிருந்த முழு அதிகார செயலாளர் நாயகம் பதவி முழுமையாகக் கட்சி யாப்பு மாற்றம் மூலம் ஒழிக்கப்பட்டுள்ளது.

தலைவரே கட்சிச் செயலாளரைத் தீர்மானிக்கும் அராஜகம் உட்பட தலைவரின் தான்தோன்றித்தன தலையீட்டால் அதிகாரம் பொருந்திய செயலாளர் நாயகம் பதவி நாசமாக்கப்பட்டுள்ளது.

எனக்குப் பதவி, பட்டம் தேவையில்லை. ஆனால், மேற்படி தன்னிச்சையாக யாப்பு திருத்தம் மூலம் அம்பாறை மாவட்ட மக்களின் அரசியல்

அதிகாரத்தை மழுங்கடித்த தலைவரின் தான்தோன்றித்தன செயற்பாட்டை எதிர்த்தே கட்சியைவிட்டு வெளியேறினேன்.

இந்த நிலைப்பாட்டில் எந்தச் சலுகையாலும் என்னைத் திருப்திப்படுத்தமுடியாது. எமது மக்களினதும், எனதும் தன்மானம், மதிப்பு என்பவற்றை இழந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடனோ தலைமையுடனோ மீண்டும் இணைந்துபோக நான் ஒருபோதும் தயாரில்லை என்றும் அறிவித்துள்ளார்.

எத்தகைய காய்நகர்த்தல்களுக்கும் மசிந்து கிழக்கில் முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்கும் விடயத்திலிருந்து பின்வாங்கமாட்டேன்.

முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்க விடயத்தில் நான் மும்முரமாகவுள்ளேன் எனவும் எமது இந்த முயற்சி நிச்சயம் வெற்றியளிக்கும் என்றும் எம்.ரி.ஹசனலி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *