• Sun. Oct 12th, 2025

சிப்ஸ் சாப்பிடும் போட்டி விபரீதமானது: 14-வயது சிறுவன் பலி

Byadmin

Sep 13, 2023

பிரபல அமெரிக்க பன்னாட்டு சாக்லெட் தயாரிப்பு நிறுவனமான ஹெர்ஷே நிறுவனத்தால் நடத்தப்படுவது ஆம்ப்ளிஃபை ஸ்னாக் பிராண்ட்ஸ். ஆம்ப்ளிஃபை, டார்டில்லா எனப்படும் சோளமாவு மற்றும் கோதுமை மாவினால் செய்யப்பட்ட சிப்ஸ் மற்றும் பாப்கார்ன் வகை உணவு பொருட்களை பாக்கெட்டுகளில் விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம் “பக்வி ஒன் சிப் சேலஞ்ச்” (Paqui One Chip Challenge) எனும் பெயரில் ஒரு போட்டியை நடத்தி வருகிறது. பெரியவர்களுக்கும், நல்ல உடல்நிலையும் ஆரோக்கியமும் உள்ளவர்கள் மட்டுமே இந்த போட்டியில் பங்கு பெற அந்நிறுவனம் வலியுறுத்துகிறது. இந்த போட்டியில், அந்நிறுவனம் தயாரிக்கும் கரோலினா ரீபர் மற்றும் நாகா வைபர் எனும் காரமான மிளகுப்பொடி தூவப்பட்ட ஒரே ஒரு சிப்ஸ், ஒன்றை மட்டுமே ஒருவர் உண்டு எவ்வளவு நேரம் ஏதும் குடிக்காமலும், உண்ணாமலும் இருக்க முடியும் என்பது கணக்கெடுக்கப்படும். அதன்படி வெற்றி பெற்றவர் அறிவிக்கப்படுவர். இந்த ஒரே ஒரு சிப்ஸ், மண்டை ஓட்டு அடையாளமிடப்பட்ட சவப்பெட்டி போன்ற தோற்றமுடைய ஒரு சிறு அட்டைபெட்டியில் விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தை சேர்ந்த 10-வது படிக்கும் ஹாரிஸ் வோலோபா எனும் 14-வயது சிறுவன் இப்போட்டியில் தானாக பங்கு பெற விரும்பி இதனை இணையதளம் வழியாக ஆர்டர் செய்தான். ஆர்வத்துடன் அதை உண்ட அச்சிறுவனுக்கு பள்ளிக்கு சென்றதும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. பள்ளியில் உள்ள செவிலியர் ஒருவரை அவன் தொடர்பு கொண்டதும், அவர் அவனை பரிசோதித்து முதலுதவி அளித்து வீட்டிற்கு அனுப்பியுள்ளார். வீட்டிற்கு வந்த அவன் சிறிது நேரத்தில் நினைவிழந்தான். அவசர உதவி அழைக்கப்பட்டு, காவல்துறையினரும் வந்த போது அவன் சுவாசமின்றி கிடந்ததை அடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். மருத்துவர்கள் முயன்றும் நினைவு திரும்பாமல் ஹாரிஸ் உயிரிழந்தான். செய்தி பரவியுடன் அந்த சிப்ஸ் பாக்கெட்டுகள், விற்பனை கூடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விட்டது. காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *