• Sun. Oct 12th, 2025

லிபியாவில் வெள்ள பலி எண்ணிக்கை 5300ஆக உயர்வு

Byadmin

Sep 13, 2023

லிபியா நாட்டை ‘டேனியல்’ சூறாவளி புயல் கடுமையாக தாக்கியது. மத்திய தரை கடலில் உருவான அந்த புயல், லிபியாவின் கிழக்கு பகுதியை பந்தாடியது. புயல் காரணமாக கனமழை பெய்ததால் அணைகள் நிரம்பின. டெர்னா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை உள்பட இரண்டு அணைகள் உடைந்தன. இதனால் டெர்னா நகரங்களுக்குள் திடீரென்று வெள்ளம் புகுந்தது. இதில் வீடுகள், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். பெரும்பாலானோர் வெள்ளத்துடன் கடலுக்குள் அடித்து செல்லப்பட்டனர். அதேபோல் சூசா, பாய்தா, மார்ஜ் உள்பட பல நகரங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் பலியாகி இருப்பது தெரிய வந்தது. லிபியாவின் கிழக்கு பகுதியை நிர்வகித்து வரும் அரசு தரப்பில் நேற்று கூறும்போது, 2 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாகவும், 6 ஆயிரம் பேரை காணவில்லை என்றும் தெரிவித்து இருந்தது. அப்பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் ஏராளமான உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கனமழை வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 5300-ஐ தாண்டி உள்ளது. இதுவரை 10 ஆயிரம் பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிழக்கு லிபியா உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது அபு கூறும்போது, “டெர்னாவில் மட்டும் பலி எண்ணிக்கை 5300-ஐ தாண்டி உள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது” என்றார். டெர்னா நகரம் பேரழிவை சந்தித்து உள்ளது. அங்கு சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. வீடுகள் அனைத்தும் உருக்குலைந்து போய் உள்ளது. புயல் காரணமாக பெய்த கனமழையால் அணைகள் நிரம்பி உடைந்ததால் வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. இந்த திடீர் வெள்ளத்தை எதிர்பார்க்காத மக்கள் சுதாரிப்பதற்குள் அதில் சிக்கி கொண்டனர். கடும் வேகத்தில் வந்த வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டதால் பலி எண்ணிக்கை அதிகரித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *