இன்றைய தேதியில் ஒரு நாட்டின் குடியுரிமை இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள் என்றால் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அன்றி வேறில்லை. குடியுரிமை மறுக்கப்பட்டதன் பிரதிபலனாக அடிப்படை தேவைகள் உட்பட அத்தனை மனித உரிமைகளும் மறுக்கப்பட்ட நிலையில் ஆகக்குறைந்தது தமது பிறப்பு அத்தாட்சி பத்திரத்தை கூட பெற்றுக்கொள்ளமுடியாமல் பல பத்தாண்டுகளாக இந்த மக்கள் திண்டாடி வருகிறார்கள்.
2012 ஆம் ஆண்டு முதல் பர்மிய அரச அனுசரணையுடன் திட்டமிடப்பட்டு இவர்கள் இனவழிப்பு செய்யப்பட்டு வருகிறார்கள். 2012 ஆம் ஆண்டு இனவக்கலவரத்தின் பின்னர் தொண்டு நிறுவனங்கள் உட்பட வெளியாட்கள் எவரும் உட்செல்ல முடியாத திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இவர்களுக்கு அங்கிருந்து வெளியேற இருப்பதற்குரிய ஒரே வழி வங்க கடல் மட்டுமே. அந்த வழியை கூட பர்மிய அரசாங்கம் திறந்து வைத்திருப்பதற்கு எந்த நல்லெண்ணங்களும் காரணமில்லை.
கடல் வழியாக இவர்கள் பர்மாவை விட்டு வெளியேறட்டும் என்ற நோக்கத்திலேயே அந்த வழியை திறந்து வைத்துள்ளார்கள். ஆனாலும் கடலின் ஊடாக வெளியேறும் ரோஹிங்கியாக்களை தாங்கிய படகுகளை பொறுப்பேற்பதற்கு எந்த நாடுகளும் தயாரில்லை.
ஐஸ்ஐஸ் மூலம் யசீதிய மக்கள் இனவழிப்பு செய்யப்பட்டபோது அவர்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கையில் இறங்கிய சர்வதேச சமூகம், யசீதிய இனவழிப்புக்கு கொஞ்சமும் குறையாத ரோஹிங்கியா இனவழிப்பின் போது அமைதி காப்பது தெளிவான இரட்டை நிலைபாட்டாகும்.
குடியுரிமை பறிக்கப்பட்டு நீங்கள் இந்த நாட்டு பிரஜைகள் இல்லை என்று பர்மிய அரசாங்கம் அடித்து துரத்த நினைக்கும் இந்த மக்கள் பர்மாவின் ரகைன் மாநிலத்தில் குடியேறியது இன்று நேற்றல்ல. 1200 வருடங்களுக்கு முன்னர்.
8 ஆம் நூற்றண்டில் இந்த பகுதி அரகான் ராட்சியத்தின் போது இவர்கள் முதன்முதலில் அங்கு குடியேறினர். அந்த நேரம் அரகான் ஒரு ராட்சியம், பர்மா இன்னொரு ராட்சியம். பின்னர் அரபு வியாபாரிகளின் தொடர்புகள் அதிகரித்த பின்னர் 14 ஆம் நூற்றாண்டில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்.
இந்த நிலையில் 18 ஆம் நூற்றாண்டில் பர்மிய அரசன் இவர்கள் வாழ்ந்த அரகான் ராட்சியத்தை கைப்பற்றிய பின்னர் இந்த மக்கள் தற்போதைய பங்களாதேச பகுதிகளுக்கு தப்பியோடினார்கள். அந்த நேரம் வங்காள பகுதிகளை ஆண்டுவந்த பிரித்தானியாவின் உதவியோடு அங்கு குடியேறினார்கள்.
1824 ஆம் ஆண்டு பிரித்தானியா பர்மாவை கைப்பற்றி இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைத்துக்கொண்ட பின்னர் உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொழிலாளர்களாக ரோஹிங்கியாக்கள் மீண்டும் பர்மாவில் குடியேறினார்கள்.
1942 ஆம் ஆண்டு பிரித்தானியாவிடமிருந்து பர்மாவை ஜப்பான் கைப்பற்றியதும் பிரித்தானியர்களால் தொழிலுக்காக கொண்டு வரப்பட்ட ரோஹிங்கியாக்கள் பிரித்தானிய ஆட்சியில் உதவி பெறுகிறார்கள் என்ற காரணத்தை காட்டி ஜப்பாநியர்களோடு இணைத்து அன்றைய பர்மிய பௌத்தர்கள் இவர்களை தாக்க தொடங்கினார்கள்.
1945 ஆம் ஆண்டு பர்மிய சுதந்திர போராட்ட வீரரான ஆன் சான் (ஆன் சான் சூக்கியின் தந்தை) தலைமையில் ஜப்பானிடம் இருந்து பர்மா சுதந்திரத்தை பெற்றுக்கொண்டது. சுதந்திரத்தின் பின்னர் தமக்கான அரகான் மாநிலம் பெற்றுக்கொடுக்கப்படும் என்ற நம்பிக்கையில் சுதந்திர போராட்டத்தில் பல ஆயிரம் ரோஹிங்கியா வீரர்களும் பங்கு பற்றி இருந்தார்கள்.
ஆனாலும் அரகான் மாநிலம் கிடைக்கவில்லை.. இதனால் அரகான் பிரதேசத்தை இன்றைய பங்களாதேஷ் (அன்றைய கிழக்கு பாகிஸ்தான்) உடன் இணைக்குமாறு ரோஹிங்கியாக்கள் பிரித்தானியர்களுக்கு அழுத்தம் கொடுக்க துவங்கினார்கள். இதனால் பர்மிய அரசாங்கத்திற்கும் ரோஹிங்கியாக்களும் இடையில் பிளவுகள் அதிகரித்தது. இதனால் இவர்களை அடக்க நினைத்த பர்மிய அரசு இவர்களின் குடியுமையை பறித்தது.
1962 ஆம் ஆண்டு பர்மாவில் தோன்றிய இராணுவ ஆட்சியில் இவர்களின் நிலைமை இன்னும் மோசமானது. லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீண்டும் பங்களாதேசத்திற்கு தப்பியோடினார்கள். 1978 ஆம் ஆண்டு பங்களாதேசம் ஐநாவுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒரு உடன்படிக்கைக்கு அமைய ரோஹிங்கிய அகதிகள் மீண்டும் பர்மாவுக்கு திரும்பினார்கள்.
எனினும் 1982 ஆம் ஆண்டு பர்மிய அரசு ரோஹிங்கியாகளையும் சட்டவிரோத குடியேற்றகாரர்கள் என்று பிரகடனப்படுத்தியது.
அத்தோடு இவர்கள் மீதான ஒடுக்குமுறைகளையும் அதிகரித்தது. எனினும் அசின் விராது தலைமையில் 2012 ஆம் ஆண்டு முதல் ஒரு முற்று முழுதான இனவழிப்பு யுத்தம் இவர்கள் மேல் தொடுக்கப்பட்டுள்ளது.
UPDATE: 2017/08/29 ::
அராக்கான் படுகொலைகளுக்கு எதிராக ஆசியான் அமைப்பை செயலாற்ற கோரும் இந்தோனேஷிய குரல்கள்
இந்தோனேஷியாவின் இரண்டாவது பெரிய இஸ்லாமிய சங்கமான ஜம்இய்யா முஹம்மதியா அராக்கான் முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலைகளை நிறுத்த செயற்படுமாறு ஆசியான் அமைப்பை கோரியுள்ளது.
இதேவேளை , இந்தோனேஷியாவின் பெரும் நிறுவனமான நஹ்ழத்துள் உலமா அமைப்பு இப்படுகொலைகளை கடுமையாக கண்டித்துள்ளதுடன் அங்குள்ளவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை தம்மால் இயன்றவரை செய்ய தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.
ஐ நாவால் நியமிக்கப்பட்ட உண்மைகளை கண்டறியும் குழுவின் இறுதி அறிக்கையினை மியன்மார் அரசுக்கு கோபி அனான் ஒப்படைத்த இரண்டு நாட்களில் இந்த படுகொலைகள் புதிதாக ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.
– டில்ஷான் முஹம்மத்–