இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் பதவிக்கு தான் விண்ணப்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரத்ன தில்ஷான் இன்று (15) தெரிவித்துள்ளார்.
அத தெரண STRAIGHT DRIVE நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், தனக்கு துடுப்பாட்ட பயிற்சியாளர் பதவி கிடைத்தால், கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட துறையை மேம்படுத்த 03 வருட திட்டம் இருப்பதாக தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கிறிஸ் சில்வர்வுட் தவிர்ந்த ஏனைய பயிற்றுவிப்பாளர்கள் எதிர்வரும் காலங்களில் மாற்றப்படுவார்கள் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான சமிந்த வாஸ், உபுல் சந்தன, ரங்கன ஹேரத், டி.எம்.தில்ஷான், அவிஷ்க குணவர்தன, திலின கண்டம்பி போன்றோருக்கு பயிற்சியாளர் குழுவில் அதிக வாய்ப்புகளை வழங்க புதிய கிரிக்கெட் ஆலோசகர் சனத் ஜயசூரிய உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய ஆலோசகர் சனத் ஜயசூரிய தலைமையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று (15) கூட்டமொன்று நடைபெற்றது.
ஆலோசகர் மஹேல ஜயவர்தன மற்றும் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் மற்றும் உப தலைவர் மற்றும் விளையாட்டு கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
Source – Ada Derana