• Sun. Oct 12th, 2025

சீரற்ற வானிலையால் இருவர் உயிரிழப்பு!

Byadmin

Jan 11, 2024

 ஊவா, மத்திய, சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு, வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களின் பல பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்து வருகின்றது.
சீரற்ற வானிலையால் 7 மாகாணங்களில் 33,687 குடும்பங்களைச் சேர்ந்த 109,635 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்தம் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாகவும், 1,587 குடும்பங்களைச் சேர்ந்த 4,981 பேர் இடம்பெயர்ந்து முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பொலன்னறுவை மாவட்டத்தின் ஹிகுரக்கொட நெல்பார   பிரதேசத்தில் களிமண் வீடு ஒன்றில் சுவர் இடிந்து விழுந்ததில் 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த ஒன்றரை வயது குழந்தை மற்றும் அவரது கணவரும் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அடை மழையினால் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
 
12 வருடங்களின் பின்னர், அம்பாறை சேனாநாயக்க சமுத்திரம் மற்றும் அம்பாறை நீர்த்தேக்கம் மற்றும் கொன்டுவடுவான நீர்த்தேக்கம் ஆகிய பெருக்கெடுத்ததன் காரணமாக வெள்ளத்தில் மூழ்கிய அம்பாறை – இங்கினியாகல பிரதான வீதி சுதுவெல்ல பிரதேசத்திலிருந்து மூடப்பட்டுள்ளது.
மேலும், கல் ஓயா, மொரவில் ஓயா, பல்லன் ஓயா மற்றும் எக்கக் ஓயா ஆகியன நிரம்பி வழிவதால் அம்பாறை ஹிகுரான வீதியின் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளதுடன், போக்குவரத்து தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
 அம்பாறை மாவட்டத்திலும் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், இதன் காரணமாக இதுவரை 1197 குடும்பங்கள் இடம்பெயர் முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
 மண்மேடு சரிந்த காரணத்தால் போக்குவரத்து நிறுத்தப்பட்ட பதுளை கொழும்பு வீதியின் ஹாலிஎல உடுவர 7 ஆம் தூண் பகுதியை வாகன போக்குவரத்துக்காக சீர் செய்யும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், ஹாலிஹெல கெடவல வீதியில் ஏற்பட்ட மண்சரிவினால் அவ்வழியாகச் செல்லும் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால், உயர்தரப் பரீட்சைக்கு செல்லும் பரீட்சார்த்திகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
லுனுகல பிபில A5 பிரதான வீதி அரவாகும்புர பிரதேசத்தில் பாறைகள் மற்றும் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் முற்றாக தடைப்பட்டுள்ளது.
நாட்டின் பாரிய நீர்ப்பாசனக் குளங்களில் ஒன்றான மட்டக்களப்பு உறுகாமம் குளம் மற்றும் ரூகம் குளத்தில் தலா மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களுக்கு அனுப்பப்பட்டதுடன், மழை காரணமாக மட்டக்களப்பு ரயில் பாதை உட்பட பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
இதனால் கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் இன்று இரவு இயக்கப்படவிருந்த மீனகயா நகரங்களுக்கு இடையிலான அதிவேக ரயில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மழை காரணமாக பல முக்கிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், பல குளங்களும் நிரம்பி வழிகின்றன.
பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் 10 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ள நிலையில் துமுடுலுகல பிரதேசத்தில் உள்ள பாறை ஒன்றில் 3 காட்டு யானைகளும் கரைக்கு வர முடியாமல் இருப்பதை அவதானிக்க முடிகிறது.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *