• Sun. Oct 12th, 2025

உலகின் முதல் ஸ்மார்ட் சிட்டி மன்றம் சவூதி தலைமையில்

Byadmin

Jan 16, 2024

உலகின் முதல் ஸ்மார்ட் சிட்டி மன்றத்தை சவூதி அரேபியாவின் தரவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆணையம் (SDAIA) வருகின்ற பெப்ரவரி மாதம் 2 முதல் 13 வரை சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடாத்த தீர்மானித்துள்ளது. எரெனா என்ற கண்காட்சிகளுக்கான அரங்கத்தில் நடக்கவிருக்கும் இம்மன்றத்தில் 40க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 80 பேச்சாளர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். 

இந்த நிகழ்வைப் பற்றி, SDAIA இன் தலைவர் கலாநிதி அப்துல்லா பின் ஷரஃப் அல்-கம்டி கருத்து தெரிவிக்கையில்,  “இந்த உலகளாவிய மன்றமானது ஸ்மார்ட் நகரங்கள் என்றால் என்ன என்பது பற்றியும் அவற்றின் மற்றும் முக்கியத்துவத்தையும் அறியப்படுத்தும் வகையில் அமையப்பெறவுள்ளதோடு, இந்த நகரங்களை உருவாக்க செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்றும் தெளிவூட்டவுள்ளது” என கூறினார். சவூதி அரேபியாவின் பிரதமர் மற்றும் SDAIA இன் இயக்குநர்கள் குழுவின் தலைவருமான பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அவர்களின் வழிகாட்டளுக்கு இணங்கவே இந்த மன்றத்தை ஏற்பாடு செய்வதில் இராச்சியம் ஆர்வம் காட்டியதாகவும் அவர் கூறினார். தரவுகள் மற்றும் AI அமைப்பு, மேம்பாடு மற்றும் சவூதியில் அதன் செயல்பாடுகளுக்கான தேசியக் குறியீடாக SDAIA இன் முக்கியப் பங்கையும் அவர் எடுத்துரைத்தார்.

மேம்பட்ட தொழில்நுட்பங்களின் துரித வளர்ச்சியை அங்கீகரிக்கும் விதத்தில் உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் தங்கள் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த AI போன்ற தொழிநுட்பங்களை பயன்படுத்தியும் அவற்றை மேம்படுத்தியும் வருகின்றன. இதற்கு சவூதி அரேபிய இராச்சியமும் விதிவிளக்கல்ல. 

ஸ்மார்ட் நகரங்களின் எதிர்காலம் பற்றிய கலந்துரையாடல், அவற்றின் உள்கட்டமைப்புடன் தொடர்புடைய சவால்களை எதிர்கொள்தல் மற்றும் உலகெங்கிலும் உள்ள நகரங்களில் வளர்ந்து வரும் மக்கள்தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான புதுமையான தீர்வுகளை ஆராய்வதுடன் சம்மந்தப்பட்ட கலந்துரையாடல்கள் மற்றும் அமர்வுகளை இம்மன்றம் கொண்டிருக்கும்.
மேலும், 2030 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு (SDGs) இணங்க, ஸ்மார்ட் நகரங்களை நிறுவுவதில் சவூதி மற்றும் பிற நாடுகள் அடைந்துள்ள முன்னேற்றங்களையும் இம்மன்றம் எடுத்துக் காண்பிக்கவுள்ளது.

இம்மன்றமானது 18,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை நேரிலும் நிகழ்நிலையிலும் ஒன்றுசேர்த்து நடத்தவுள்ளதோடு, ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் AI தொழில்நுட்பங்களை நிர்மாணிப்பதில் நிபுணத்துவம் பெற்ற உலகெங்கிலும் உள்ள நிபுணர்களை ஒன்றிணைக்கும் வகையில் ஸ்மார்ட் நகரங்களுக்கான உலகளாவிய தளத்தையும் நிறுவுகிறது. 

உலகளாவிய நகரங்கள், நகர்ப்புற நடமாட்டத்தின் எதிர்காலம், ஸ்மார்ட் பொது சேவைகள், அடுத்த நூற்றாண்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்தவகையிலன நகரங்களை உருவாக்குவதற்கான திட்டமிடல், மேம்படுத்தப்பட்ட புதிய கண்டுபிடிப்புகளை நிறுவுதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை இம் மன்றத்தில் கலந்துரையாடவுள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு AI மற்றும் தொழிநுட்பவியலோடு சம்மந்தப்பட்ட சவூதியின் இவ்வாறான முன்முயற்சிகள் அனைத்தும் அந்நாட்டின் விஷன் 2030 திட்டத்திற்கமைவாகவே இடம்பெறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *