• Sat. Oct 11th, 2025

40 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லிம்களை வெளியேற்ற இந்தியா முடிவு

Byadmin

Sep 15, 2017

ரோஹிங்கியா முஸ்லிம்களால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதால் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள 40 ஆயிரம் பேரை வெளியேற்ற விரும்புவதாக மத்திய அரசு கருதுகிறது. மியான்மரில் உள்ள ராகினே மாகாணத்தில் வசித்து வரும் சிறுபான்மை மக்களான ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது அந்நாட்டு அரசு படைகள் வரலாறு காணாத வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளன.

இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்தனர். உயிருக்கு பயந்து அங்கிருந்து லட்சக்கணக்கான மக்கள் நீண்ட தூரம் வயல் வெளிகளின் ஊடாகவும், ஆறுகளை நீந்தி கடந்தும் பங்களா தேஷ் எல்லையை அடைந்து வருகின்றனர்.

இதுவரை சுமார் 3. 5 லட்சம் அகதிகள் இவ்வாறு வந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியா உதவ வேண்டும் என பங்களாதேஷ் கோரிக்கை விடுத்திருந்தது.

ஆனால் இந்த சூழலில் இந்தியாவில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களை வெளியேற்ற போவதாக மத்திய அரசு அறிவித்தது.   தற்போது ரோஹிங்கியாக்களை வெளியேற்ற போவதாக கூறிய மத்திய அரசின் செயலை ஐநா வன்மையாக கண்டித்துள்ளது. இந்தியாவில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 40 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அவர்களில் சுமார் 15 ஆயிரம் பேருக்கு அகதிகள் அந்தஸ்து வழங்கி ராஜஸ்தான், காஷ்மீர், டெல்லி, ஐதராபாத், அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ரோஹிங்கியாக்களை திருப்பி அனுப்பும் மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து 2 அகதிகள் சார்பில் மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உள்ளது.

இதுகுறித்து நேற்று ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. அந்த பதில் மனுவில், ரோஹிங்கியா முஸ்லிம்களால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது.

மேலும் அவர்கள் தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு வைத்து கொள்ள வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் பங்களா தேஷ் தீவிரவாத குழுக்கள் ரோஹிங்கியாக்கள் மூலமாக இந்தியாவில் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

எனவே அவர்களை வெளியேற்ற இந்திய அரசு விரும்புகிறது என மத்திய அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இன்னும் இதுகுறித்து மத்திய அரசு இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில் இந்த வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று  ஆர்எஸ்எஸ் ஆதரவு தலைவர் கோவிந்தாச்சார்யாவும்  சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளார்.

அவர் தனது மனுவில், இந்தியாவில் தங்கியுள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்றும், அவர்களால் தேசத்திற்கு அச்சுறுத்தல் உள்ளது என்றும் அதில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்- 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *