• Tue. Oct 14th, 2025

மக்களின் வாக்குரிமையை கேலிக்கூத்தாக்க முயற்சி – கபே

Byadmin

Sep 19, 2017

தேர்தலொன்றுக்கு முகங்கொடுக்க அஞ்சும் அரசாங்கம் தேர்தலை ஒத்திவைப்பதற்கான உபாயத்தை பின் கதவால் நிறைவேற்ற முயற்சிப்பது வெட்கக்கேடானதென சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே விமர்சித்துள்ளது.

விகிதாசார தேர்தல் முறைக்குப் பதிலாக, தொகுதிவாரியை உள்ளடக்கிய கலப்புமுறையொன்றை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

20ஆவது திருத்தச் சட்டமூலத்தை கொண்டுவரும் அரசாங்கத்தின் முயற்சிக்கு நீதிமன்றம் இடமளிக்காமையால் இவ்வாறான மாற்றமொன்றைக் கொண்டுவந்து தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

இராஜகிரியவிலுள்ள கபேயின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். இந்த யோசனை உரிய நடைமுறைகளைப் பின்பற்றி கொண்டுவரப்படுமாயின், தேர்தல்கள் பிற்போடப்படுவதற்கு எதிரான பிரஜைகள், அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் அவற்றுக்கு எதிராக நீதிமன்றம் சென்று அதனை சவாலுக்கு உட்படுத்த முடியும்.

அவ்வாறு செயற்படுவதானது ஜனநாயக நடவடிக்கையாக இருக்காது.

சட்டத்தை இயற்றும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு உள்ளது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குள் ஒழிந்துகொண்டு, மக்களின் வாக்களிக்கும் உரிமை, மக்களின் ஜனநாயக உரிமை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பில் கலந்துகொள்ளும் உரிமை என்பவற்றை இல்லாமல் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்ட சட்டம் தொடர்பான எந்த காரணங்களையும் மக்களுக்கு தெரிவிக்காமல், உச்சநீதிமன்றத்துக்கு காரணங்களை தெரிவிக்காமல், மக்களின் கருத்துக்களை அறிந்துகொள்ளாமல் சட்டமொன்றை திருத்த முயல்வது மோசமான செயற்பாடு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனநாயகமற்ற சட்டமொன்றை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கும் கட்சியொன்று பின்கதவால் நிறைவேற்ற முயற்சிப்பது மோசமான நிலைமையாகும் என்றும் குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலையில் சட்டவிரோதமான முறையில் சட்டமொன்றை இரகசியமாக நிறைவேற்ற முயற்சிப்பது நல்லாட்சிக்கு எதிரான செயற்பாடாகும்.

இது தொடர்பாக சட்டமா அதிபர், சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோருக்கும் கடிதங்களை அனுப்பிவைத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். (tkn)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *