• Mon. Oct 27th, 2025

தரமற்ற அரிசி தொடர்பில் அரசாங்கம் விளக்கமளிப்பு!

Byadmin

Apr 22, 2024

கம்பஹா பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழுவினால் மனித பாவனைக்கு உகந்ததென உறுதி செய்யப்பட்ட அரிசி மாத்திரமே, பாடசாலை போஷாக்குத் திட்டத்திற்காக வெயங்கொடை களஞ்சியத்திலிருந்து பகிர்ந்தளிக்கப்படுவதாக ஜனாதிபதி அலுவலகத்தின் உலக உணவுத் திட்ட ஒத்துழைப்புக்கான செயலகம் அறிவித்துள்ளது.
அரச பகுப்பாய்வுத் திணைக்களம், வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் அறிக்கைகளை மையப்படுத்தியே மேற்படி அலுவலகம் இந்தப் பரிந்துரைகளை வழங்கியுள்ளது.  
அதன்படி பல நிறுவனங்களால் மனித பாவனைக்கு உகந்தது என உறுதிப்படுத்தப்பட்ட அரிசி தொகையை, மீள் பரிசோதனை செய்து பெற்றுக்கொள்வதற்காக சுகாதார அதிகாரிகள் குழுவொன்றை நியமிக்குமாறு அனைத்து மாகாணச் செயலாளர்களையும் அறிவுறுத்தியிருப்பதாகவும், உலக உணவுத் திட்ட ஒத்துழைப்புக்கான செயலகம் அறிவித்துள்ளது.  
இதன்படி, மத்திய களஞ்சியசாலையில் இருந்து அந்தந்த மாகாணங்களுக்கு அரிசியைப் பகிர்ந்தளிக்க முன்னர், மாகாண கல்விக்கு பொறுப்பான தலைமை அதிகாரியொருவர் மற்றும் மாகாண பொது சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட குழுவினரால் பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் அரிசி மனித பாவனைக்கு உகந்ததென உறுதி செய்யப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முத்திரையுடன் உறுதிப்படுத்தப்படும் அரிசி மாத்திரமே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளது. 
பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்படும் உணவின் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் தரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், உலக உணவுத் திட்ட ஒத்துழைப்புக்கான செயலகம், உலக உணவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் அரிசியை பாடசாலைகளின் உணவு சமைப்பதற்கு விநியோகிக்கும் முன்பாக பொதுச் சுகாதார பரிசோதகர் தர நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் செயலகம் வலியுறுத்தியுள்ளது.  
அதன்படி சர்வதேச உணவுப் பொதியிடல் தர நியமங்களுக்கு அமைவாக பொதி செய்யப்பட்ட இந்த அரிசி தொகையை மே 31 ஆம் திகதி வரையில் பயன்படுத்த முடியும் என்பதை உலக உணவுத் திட்டம் உறுதி செய்துள்ளது.  
இந்த அரிசி உதவித் திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்றது என்பதால் பொதியின் மேற் புறத்தில் “Not for Sale” விற்பனைக்கு இல்லை எனக் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், அதனால் அந்த அரிசி மனித பயன்பாட்டிற்கு உகந்தல்ல என பொருள்படாதெனவும் உலக உணவுத் திட்டத்தின் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, சுகாதார துறைக்குள் பல தரப்புக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சரியான பரிசோதனையின் பின்னரே, அரிசித் தொகையை பகிர்ந்தளிப்பதாக உலக உணவுத் திட்ட ஒத்துழைப்புச் செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *