• Sun. Oct 12th, 2025

எல்லோரும் இனவாதிகள் இல்லை (இன்று பஸ்ஸில் பெற்ற அனுபவம்)

Byadmin

Sep 23, 2017

ஹிஜ்ரி 1439 பிறை 01(இன்று) காலை 8 மணி. கொழும்பு நோக்கி செல்லும் பிறைவட் பஸ்ஸில் ஏறினேன்.

மதகுரு மாருக்கான ஆசனத்தில் ஒரு தொப்பி தூங்கிக் கொண்டிருந்தார். பக்கத்து சீற்றில் ஆளில்லை.

அதில் உட்கார்ந்து சென்றால் ‘அவர்கள்’ இடையில் குடையுடன் ஏறினால் வடை போய்விடும் என்ற நினைப்பில் அதற்குப் பின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டேன்

அந்தப் பிரபல விகாரையின் முன் பஸ் நின்றதும் காவியுடையுடன் ‘அவர்’ ஏறினார்.

தொப்பி ஜன்னலோர இருக்கையை அவருக்குக் கொடுத்து விட்டு மறு இருக்கைக்கு நகர்ந்தார்.

” மிருகத்திட கழுத்தில் கத்தி வைக்கிறவனுக்குப் பக்கத்தில் எல்லாம் நான் உட்கார முடியாது. நீங்களெல்லாம்…………”வார்த்தைகளை வளர்த்துக் கொண்டு போனார். உட்காரவில்லை.

தொப்பி அமைதியாக அமர்ந்திருந்தார். எழும்பவுமில்லை. எதிர்க்கவுமில்லை.

” உங்களைப் போல ஆட்களால்தான் நாடு சீரழியுது. எல்லோரும் மனுசன்கள்தான். முதல்ல அதைப் புரிஞ்சு கொள்ளுங்க” அந்த சிங்கள கண்டக்டரின் கர்ஜனையில் பஸ் அதிர்ந்தது.

” முதல்ல மனுசத்தன்மையாய் கதைக்கப் பழகுங்க” என் பக்கத்திலிருந்த சிங்களப் பெண் போட்ட சத்தத்தில் காவி கப்சிப் ஆனது.

சாரதி பஸ்ஸை நிறுத்தினார். ” தயவு செய்து இறங்குங்க” கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாய் காவி இறக்கி விடப்பட்டார்.

” சரியான வேலை” சிங்களக் குரல்கள் பரவலாகக் கேட்டன.

இறக்கிவிடப்பட்ட காவியை விட்டு விட்டு இறக்காத மனித நேயத்துடன் பஸ் பயணத்தைத் தொடர்ந்தது.

(நம்ப ஏலாது, பஸ் நம்பர் என்ன? காரில்தானே போவீர்கள்? வீடியோ ஆதாரம் இருக்கா?- கேட்கும் சகோதரர்களுக்கு – நீங்கள் நம்பாமலே இருந்து விட்டுப் போங்கள். ஆனால் சம்பவம் ஹக்கானது)

Mohamed Nizous

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *