• Fri. Oct 17th, 2025

நாளையும் நாளை மறுதினமும் அரச சேவை முடங்கும் அபாயம்!

Byadmin

Jul 7, 2024

200க்கும் மேற்பட்ட அரச சேவை சங்கங்கள் நாளை (08) மற்றும் நாளை மறுதினமும் (09) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளன.
நிறைவேற்று அதிகாரிகளுக்கு மாத்திரம் வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவை அனைத்து அரச ஊழியர்களுக்கும் வழங்குமாறு கோரி இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கிராம உத்தியோகத்தர்கள், நில அளவையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அஞ்சல் ஊழியர்கள் உட்பட பல அரச சேவை தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் இணை அழைப்பாளர் சந்தன சூரியஆராச்சி தெரிவித்தார்.
இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து மத்திய அஞ்சல் பரிமாற்றக நிலையத்தின் ஊழியர்கள் இன்று (07) மாலை 4 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் சேவைகள் சங்கத்தின் அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.
இந்த தொழிற்சங்க நடவடிக்கையானது 1980 ஆம் ஆண்டு வேலை நிறுத்தத்திற்குப் பின்னர் இலங்கையில் இடம்பெறும் மிகப் பெரிய வேலை நிறுத்தமாக இருக்கும் என இலங்கை அரச அதிகாரிகள் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் சுமித் கொடிகார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாளைய தினம் அமுல்படுத்தப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு அரச ஊழியர்கள் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதில்லை என அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் எஸ்.பி.மெதிவத்த தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் 9ஆம் திகதி செவ்வாய்கிழமை சுகயீன விடுமுறையை அறிவிப்பதற்கு ஆசிரியர் – அதிபர் சங்கங்களும் தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
எனினும் நாளை மற்றும் நாளை மறுதினமும் இடம்பெறவுள்ள தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு சுகாதாரத் துறையில் உள்ள எந்தவொரு தொழிற்சங்கமும் ஆதரவளிக்காது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மருத்திவர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இந்த வேலைநிறுத்தங்களை அங்கீகரிக்க முடியாது என ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *