ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் தங்கியிருந்த இடம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை மீண்டும் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட கடும் போக்கு பௌத்தர்களின் முற்றுகைக்குள்ளான நிலையில் அகதிகள் முற்றாக அங்கிருந்து வெளியேறி விட்டனர். இலங்கையில் தங்கவைக்கப்பட்டுள்ள ரோஹிஞ்சா அகதிகள்
காலையில் அந்த இடத்தில் பௌத்த பிக்குகளினால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக அந்த பகுதியில் அமைதியற்ற சூழ்நிலை காணப்பட்டதையடுத்து ரோஹிஞ்சாக்கள் போலிஸாரால் பாதுகாப்பு கருதி வேறிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். இதனையடுத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றிருந்தனர்.
மாலையில் மீண்டும் ரோஹிஞ்சாக்கள் தங்கியிருந்த இடத்திற்கு அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்தனர். இது பற்றி அறிந்த பௌத்த பிக்குகள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான கடும் போக்கு பௌத்தர்கள் மீண்டும் அந்த இடத்தில் கூடினர். இதனால் அமைதியற்ற சூழ்நிலை காணப்பட்டது.
அவர்கள் தங்கியிருந்த வீடு கல் வீச்சு தாக்குதலுக்குள்ளானது. ஜன்னல்கள் சேதமடைந்தன. வீட்டு கதவுகள் உடைக்கப்பட்டன. சில வீட்டு உடமைகளும் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து அவர்கள் தொடர்ந்து அந்த இடத்தில் தங்கியிருக்க முடியாத நிலையில் அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். போலிஸாரால் பாதுகாப்பாக அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
“ஐ.நா அகதிகள் ஆணையத்தின் தகவல்களின் படி பூசா முகாம்க்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம்” என்கின்றார் சட்டத்தரணி சிராஸ் நூர்டின்.