கல்கிஸ்ஸ பகுதியில் ரோஹிங்யா அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்த வீடு நேற்று தாக்கப்பட்டமை குறித்து ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான ஆணையகம் (UNHCR) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
“பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தங்கியிருந்த வீடு தாக்கப்பட்டமை குறித்து ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், அது குறித்து கவனம் செலுத்துவதாகவும்” UNHCR இலங்கை அலுவலகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி இலங்கை வட கடல் பகுதியில் வைத்து இவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் UNHCR அனுசரணையில் நீதிமன்ற உத்தரவுக்கமைய இரத்மலானை பகுதியில் தங்கவைக்கப்பட்டனர். குறித்த அகதிகளில் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 31 பேர் அடங்குவதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, “வன்முறை மற்றும் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு சர்வதேச பதிக்காப்பு மற்றும் உதவி தேவை என்பதை ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான ஆணையகம் வலியுறுத்துவதாக” அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகதிகள் மற்றும் புகலிடம் கோருபவர்களின் வருகை இலங்கை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது எனவும், அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி அவர்களுக்கான நீண்டகால தீர்வு காணும் வரை UNHCR உதவியளித்து வருவதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.