ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு முஸ்லிம்கள் மீது எந்த அக்கறையுமில்லை என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
மூதூர்த் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலொன்று திங்கட்கிழமை அவரது கிண்ணியா அலுவலகத்தில் இடம்பெற்ற போது பேசுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது:
திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். எனினும் முக்கிய அலுவலகங்களில் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் இல்லாமை இம்மாவட்ட முஸ்லிம்களிடையெ பெருங்கவலையைத் தோற்றுவித்துள்ளது.
திருகோணமலை மாவட்ட செயலகத்தின் முக்கிய பதவிகளிலும் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் இல்லை. எனவே குறைந்தது ஏதாவதொரு பதவிக்காவது முஸ்லிம் உத்தியோகத்தர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற ஆதங்கம் இம்மாவட்ட முஸ்லிம்களிடையே இருந்து வருகின்றது.
இதற்காக பதவியில் இருக்கின்ற எவரையும் இடமாற்றாது வெற்றிடமாகவுள்ள சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர் பதவிக்காவது முஸ்லிம் உத்தியோகத்தர் ஒருவரை நியமித்து தருமாறு நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்தேன். இந்த விடயத்தை உடன் தான் செய்து தருவதாக அவர் எனக்கு வாக்குறுதி அளித்தார்.
நான் இந்த வேண்டுகோளை விடுத்து சுமார் 9 மாதங்கள் கடந்து விட்டன. எனினும் இதுவரை எதுவும் நடக்க வில்லை. ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர். சமுர்த்திக்கு பொறுப்பான அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவும் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர். இவர்களால் எமது மாவட்ட முஸ்லிம்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
அவர்களுக்கு நமது மாவட்ட முஸ்லிம்கள் மீது அக்கறை இருந்திருந்தால் நடைமுறைச் சாத்தியமான எனது இந்த கோரிக்கையை எப்போதோ நிறைவேற்றித் தந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் இது பற்றி கவனத்தில் எடுத்ததாகவோää நடவடிக்கை எடுத்ததாகவோ தெரியவில்லை. எனவே அவர்களுக்கு முஸ்லிம் மக்கள் குறித்து எந்த அக்கறையுமில்லை என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.
முஸ்லிம் மக்களின் நடைமுறைச் சாத்தியமான இந்தச் சின்னக் கோரிக்கையையே நிறைவேற்றித்தராத ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிடம் இருந்து வேறு எவற்றை இந்நாட்டு முஸ்லிம்கள் எதிர்பார்க்க முடியும்? இது குறித்து முஸ்லிம் சமூகம் சிந்திக்க வேண்டும். சமூகம் சார்ந்த இந்த உதாசீனப்படுத்தலை சகல முஸ்லிம் மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும்.
இதற்காக நமது அதிருப்தியை வெளிப்படுத்தக் கூடிய நல்லதொரு சந்தர்ப்பமாக தேர்தலொன்று நம்மை எதிர்நோக்கி வருகின்றது. எல்லா முஸ்லிம் மக்களும் இதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
-ஊடகப்பிரிவு –