• Mon. Oct 13th, 2025

அன்புள்ள மகனுக்குஅப்பா எழுதுவது,

Byadmin

Aug 6, 2024

இது நான் உனக்கு எழுதும் முதல் கடிதம். இதைப் படித்துப் புரிந்துகொள்ளும் வயதில் நீ இல்லை.

மொழியின் விரல் பிடித்து நடக்கப் பழகிக்கொண்டு இருக்கிறாய். வயதின் பேராற்றாங்கரை உன்னையும் வாலிபத்தில் நிறுத்தும்.

சிறகு முளைத்த தேவதைகள் உன் கனவுகளை ஆசீ்ர்வதிப்பார்கள். பெண் உடல் புதிராகும்.

என் தகப்பன் என்னிடமிருந்து ஒளித்து வைத்த ரகசியங்கள் அடங்கிய பெட்டியின் சாவியை நான் தேட முற்பட்டதை போல நீயும் தேடத் தொடங்குவாய்.

பத்திரமாகவும் பக்குவமாகவும் இருக்க வேண்டிய பருவம் அது. உனக்குத் தெரியாதது இல்லை. பார்த்து நடந்து கொள்.

நிறைய பயணப்படு. பயணங்களின் ஜன்னல்களே முதுகுக்குப் பின்னாலும் இரண்டு கண்களைத் திறக்கின்றன.

புத்தகங்களை நேசி. ஒரு புத்தகததை தொடுகிறபோது நீ ஓர் அனுபவத்தைத் தொடுவாய்.

உன் பாட்டனும் தகப்பனும் புத்தகங்களின் காட்டில் தொலைந்தவர்கள். உன் உதிரத்திலும் அந்த காகித நதி ஓடிக்கொண்டே இருக்கட்டும்.

கிடைத்த வேலையைவிட பிடித்த வேலையைச்செய். இனிய இல்லறம் தொடங்கு.

யாராவது கேட்டால் இல்லை எனினும் கடன் வாங்கியாவது உதவி செய். அதில் கிடைக்கும் ஆனந்தம் அலாதியானது.

உறவுகளிடம் நெருங்கியும் இரு. விலகியும் இரு. இந்த உலகில் எல்லா உறவுகளையும் விட மேன்மையானது நட்பு மட்டுமே.

நல்ல நண்பர்களைச் சேர்த்துக்கொள். உன் வாழ்க்கை நேராகும்.

இவையெல்லாம் என் தகப்பன் எனக்கு சொல்லாமல் சொன்னவை. நான் உனக்கு சொல்ல நினைத்துச் சொல்பவை.

என் சந்தோஷமே நீ பிறந்த பிறகுதான். என் தகப்பனின் அன்பையும் அருமையையும் நான் அடிக்கடி உணர்கிறேன்.

நாளை உனக்கொரு மகன் பிறக்கையில் என் அன்பையும் அருமையையும் நீ உணர்வாய்.

நாளைக்கும் நாளை நீ உன் பேரன் பேத்திகளுடன் ஏதோ ஒரு ஊரில் கொஞ்சிப்பேசி விளையாடிக்கொண்டு இருக்கையில் என் ஞாபகம் வந்தால், இந்தக் கடிதத்தை எடுத்துப் படித்துப்பார்.

உன் கண்களில் இருந்து உதிரும் கண்ணீர்த் துளியில் வாழ்ந்து கொண்டிருப்பேன் நான்.

  • நா.முத்துக்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *