• Sat. Oct 11th, 2025

சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க முடியும்

Byadmin

Oct 6, 2024

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (05) பிற்பகல் அநுராதபுரம் வரலாற்று சிறப்புமிக்க ஜயஸ்ரீ மகா போதியை தரிசித்து ஆசி பெற்றார்.

அநுராதபுரத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி முதலில் அடமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன நாயக்க தேரரை சந்தித்தி ஆசி பெற்றுக்கொண்டதோடு, அவரிடம் நலம் விசாரித்தார்.

அதனையடுத்து உடமலுவ விகாரைக்குச் சென்றிருந்த ஜனாதிபதி வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் அடஸ்தானாதிபதி தலைமையிலான மகா சங்கத்தினரால் செத் பிரித் பாராயணம் செய்து ஆசி வழங்கப்பட்டது.

அநுராதபுரம் லங்காராம விகாராதிபதி ரலபனாவே தம்மஜோதி நாயக்க தேரர், ருவன்வெலி, சேதவனாராம அதிபதி வண. ஈதலவெட்டுணுவெவே ஞானதிலக்க தேரர், தூபாராம விகாராதிபதி வண. கஹகல்லே ஞானிந்த தேரர், மிரிச்சவெட்டிய விகாராதிபதி வெலிஹேனே சோபித தேரர், அபயகிரி விகாராதிபதி கலாநிதி வண. கலஞ்சியே ரத்னசிறி தேரர், வரலாற்று சிறப்புமிக்க இசுறுமுனி விகாராதிபதி வண. மதவ சுமங்ல தேரர், அநுராதபுரம் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி வண. நூகேதென்னே பஞ்ஞானந்த தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது உரையாற்றிய அட்டமஸ்தானாதிபதி வண.பல்லேகம ஹேமரதன தேரர், நாடு,தேசம், மதம் என்பவற்றை உயிரையும் இரண்டாம் பட்சமாக கருதி பாதுகாக்க வேண்டுமெனவும், நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பொறுப்பு ஜனாதிபதியின் மீது சாட்டப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

அதேபோல், வடமத்திய மாகாணத்திலிருந்து உருவான அரச தலைவர் என்ற வகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு கைவிடமுடியாத பொறுப்பு சாட்டப்பட்டுள்ளது என்றும் வலியுறுத்தினார்.

மேலும், தற்போது நாட்டிலிருக்கும் அரசியல் சேற்றுக் குழியானது இந்நாட்டின் சுய நினைவுடன் கூடிய அறிவாளிகளுக்கு உகந்ததாக இல்லையென சுட்டிக்காட்டிய அவர், அந்த நிலைக்கு மாறாக நல்லதொரு அரசியல் கலாசாராத்தை நாட்டுக்குள் உருவாக்கும் இயலுமை ஜனாதிபதிக்கு உள்ளதென நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

நாட்டுக்கு தேசிய கொள்கையொன்று அவசியம் என்றும், புதிய பாராளுமன்றத்தில் எம்.பிக்களின் உதவிகளை பெற்றுக்கொண்டு நீண்ட காலத்துக்கு பொறுத்தமான சிறந்ததொரு தேசிய கொள்கையை உருவாக்க முடியுமாயின் அது சிறப்புக்குரியதாக அமையுமெனவும் அடமஸ்தானாதிபதி சுட்டிக்காட்டினார்.

அதனையடுத்து ருவன்வெலி மகா சாயவுக்கு சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ருவன்வெலி சைத்தியாதிகாரி வண. ஈதலவெட்டுணுவெவே ஞானதிலக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.

பின்னர் ருவன்வெலி சைத்தியவிற்கு அருகில் நடைபெற்ற மத நிகழ்வுகளில் பங்கேற்ற ஜனாதிபதிக்கு மகா சங்கத்தினர் செத் பிரித் பாராயணம் செய்து ஆசி வழங்கினர்.

வட மத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச,மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க, அகில இலங்கை விவசாய சங்கத்தின் உப தலைவர் சுசந்த நவரத்ன , பேராசிரியர் சேன நாணயக்கார உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *