• Sat. Oct 11th, 2025

இன்று சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து வெளியே வருவாரா?

Byadmin

Oct 6, 2017

சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து அ.தி.மு.க. (அம்மா) அணி பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது.

இதற்கிடையே தனது கணவரை பார்ப்பதற்காக 15 நாட்கள் ‘பரோல்’ வழங்குமாறு கேட்டு சசிகலா சார்பில் சிறை அதிகாரிகளிடம் கடந்த 3-ந் தேதி மனு கொடுக்கப்பட்டது.

அந்த மனுவில் சில குறைபாடுகள் இருப்பதாகவும், அதை சரிசெய்து மீண்டும் புதிய மனுவை தாக்கல் செய்யும்படியும் கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து சிறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து சசிகலாவின் வக்கீல்கள் நேற்று முன்தினம் அனைத்து தகவல்களையும் உள்ளடக்கி மீண்டும் புதிய பரோல் மனுவை சிறை அதிகாரிகளிடம் வழங்கினர். அந்த மனு சரியாக இருப்பதால் அதை ஏற்றுக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன் சசிகலாவின் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பாக சென்னை போலீசாரிடம் கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் கருத்து கேட்டு இருந்தனர்.

இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், சசிகலாவுக்கு பரோல் வழங்குவது தொடர்பாக கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் 3 கேள்விகளை எழுப்பி அதுபற்றி கருத்து கேட்டு இருப்பதாகவும், அதற்கான பதில்களை அவர்களுக்கு அனுப்பிவைத்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.

சசிகலாவின் பரோல் தொடர்பான நடவடிக்கைகள் முடிந்துவிட்ட போதிலும், நேற்று கர்நாடகத்தில் அரசு விடுமுறை என்பதால், அவருக்கு பரோல் வழங்குவது தொடர்பான உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. இதுபற்றி பரப்பன அக்ரஹாரா சிறையின் சூப்பிரண்டு சோமசேகர் கூறுகையில், சசிகலா பரோல் தொடர்பான உத்தரவு எதுவும் இன்று (அதாவது நேற்று) பிறப்பிக்கப்படவில்லை என்றார்.

எனவே பரோல் உத்தரவு இன்று (வெள்ளிக்கிழமை) பிறப்பிக்கப்படும் என்று தெரிகிறது. இதுபற்றி டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரான புகழேந்தி கூறுகையில், பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா இன்று வெளியே வருவார் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *