• Sun. Oct 12th, 2025

உலக வங்கி பிரதிநிதிகளுடன் பிரதமர் சந்திப்பு

Byadmin

Jan 22, 2025

உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவர் மார்டின் ரெய்சர்  இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்து பிரதான அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பிராந்திய விடயங்கள், நிலையான முன்னேற்றத்தை ஏற்படுத்தல் மற்றும் தேசிய சவால்களுக்கு முகம்கொடுப்பதற்கான தேவைகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது.

தொழில்நுட்ப மற்றும் தொழில் கல்வி மற்றும் பயிற்சி ஊடாக (TVET) தரமான கல்வி அணுகலை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடலின் போது பிரதானமாக அவதானம் செலுத்தப்பட்டது. மாணவர்களுக்கு பலதரப்பட்ட தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு TVET இனை பிரதான கல்வியுடன் இணைப்பதன் முக்கியத்துவம் தொடர்பில் இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.

வேலைத்தளங்களில் பாலின சமத்துவம் என்ற சிக்கலுக்குரிய விடயம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. பொருளாதார செயற்பாடுகளில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கு கொள்கை ரீதியிலான தலையீடு மற்றும் ஒத்துழைப்பு கட்டமைப்புகளின் தேவை குறித்தும் இரு தரப்பும் தமது அங்கீகாரத்தை சுட்டிக்காட்டியது.

கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பிராந்திய அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கான நிலையான தீர்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் இலங்கை மற்றும் உலக வங்கியின் பரஸ்பர உறுதிப்பாடு இந்த கலந்துரையாடலின் ஊடாக வலுப்படுத்தப்பட்டது.

நேபாளம், மாலைதீவு மற்றும் இலங்கைக்கான பிராந்திய நாடுகளின் பணிப்பாளர் டேவிட் சிசிலன் உள்ளிட்ட உலக வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகளும், இலங்கை அரசின் சார்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்ரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளியக வளங்கள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சமந்த பண்டார வெளிவிவகார அமைச்சின் பொருளாதார விவகாரங்களுக்கான (இரு தரப்பு) சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் தர்ஷன எம்.பெரேரா, வெளிவிவகார அமைச்சின் தென்கிழக்காசியா மற்றும் மத்திய ஆசிய பிரிவிற்கான பணிப்பாளர் லஷின்கா தம்முலுகே உள்ளிட்டவர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *