• Sun. Oct 12th, 2025

டில்லி முதல்வராகிறார் ரேகா குப்தா

Byadmin

Feb 20, 2025

டில்லி பா.ஜ.க. அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் டில்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா அறிவிக்கப்பட்டார். அவர் இன்று பதவியேற்கிறார்.

டில்லியின் பா.ஜ.க. முதல்வரை முடிவு செய்ய, அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் நேற்று  இரவு 7 மணிக்கு நடைபெற்றது. இதில் பா.ஜ.கவின் 48 எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர். இதில் டில்லியின் அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்கான மத்திய பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட ரவிசங்கர் பிரசாத், ஓம் பிரகாஷ் தன்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர். டில்லி பா.ஜ.க. தலைவர் வீரேந்திர சச்தேவா அவர்களை வரவேற்றார்.

தொடர்ந்து டில்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா அறிவிக்கப்பட்டார். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தற்போது பெண் முதல்வர்கள் எவருமே இல்லை. இதனால், எதிர்கட்சிகளின் மிகவும் முக்கியத் தலைவரான மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பதிலளிக்கும் வகையில் டில்லியின் முதல்வராக ஒரு பெண் அமரும் வாய்ப்புகளும் உள்ளன என தெரிவிக்கப்பட்டது . அது தற்போது உறுதியாகி உள்ளது.

டில்லியின் ராம்லீலா மைதானத்தில் இன்று மாலை 4.00 மணிக்கு துணைநிலை ஆளுநர் புதிய முதல்வர் ரேகா குப்தாவுக்கு பதவி ஏற்பு செய்து வைக்கிறார். இவருடன் புதிய அமைச்சர்களும் இதே மேடையில் பதவி ஏற்க உள்ளனர். இதில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. ஆளும் மாநில முதல்வர்கள், திரை நட்சத்திரங்களுடன் முக்கியத் துறவிகளும் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. டில்லியின் 70 சட்டப்பேரவை தொகுதிகளில் பா.ஜ.க. 48, ஆம் ஆத்மி 22 இடங்களை பெற்றிருந்தன.

டில்லியின் அடுத்த முதல்வராக டெல்லி பா.ஜ.கவின் பல்வேறு முக்கிய தலைவர்களின் பெயர்கள் சொல்லப்பட்டன. இந்த நிலையில் ரேகா குப்தா முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *