துபாயில் உள்ள ஒரு மதுவிடுதியில் ஓர் ஆணின் இடுப்பை தொட்டதற்காக பிரிட்டனை சேர்ந்த ஜேமி ஹார்ரனுக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஜீலை மாதம் ஜேமி ஹார்ரன் கைது செய்யப்பட்டார்.
ஆப்கானிஸ்தானில் எலக்ட்ரீஷியனாகப் பணியாற்றிய 27 வயதான ஜேமி, இரண்டு நாள் பயணமாக துபாய் வந்திருந்தபோது இச்சம்பவம் நடந்தது.
கூட்டம் நிறைந்த அந்த மதுபான விடுதியில் தனது பானம் கொட்டுவதைத் தவிர்க்க முயற்சிக்கும்போது, தவறுதலாக மற்றொரு ஆணின் இடுப்பை தொட்டதாக அவர் கூறினார்.
இதற்கு புகார் அளித்த தொழிலதிபர், பிறகு அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். ஆனால் அரசுத் தரப்பில் வழக்கை தொடர்ந்து நடத்தினர்.
ஜேமிக்கு ஆதரவளித்து வரும் ‘டிடெய்ண்டு இன் துபாய்’ எனும் பிரச்சார குழு, ஜேமிக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள செய்தியை வெளியிட்டுள்ளது.
” துபாயில் உள்ள ராக் பாட்டம் பாரில், ஒரு வாடிக்கையாளரின் இடுப்பை தற்செயலாக தொட்டதற்காக, ஜேமிக்கு இன்று 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.” என அக்குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
”குற்றச்சாட்டுகளை மறுத்து வாக்குமூலம் அளிக்க, முக்கிய சாட்சியங்கள் அழைக்கப்படவில்லை,” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜேமியின் வழக்கறிஞர்கள் மேல் முறையீடு செய்வார்கள் என இக்குழு கூறியுள்ளது.