நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு குறைபாடாகவுள்ள சிரி ஸ்கேன் மெஷின் ஒன்றை பெற்றுக் கொடுப்பதாகவும், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அண்மையிலுள்ள இந்த வைத்தியசாலையை உயர் நிலையில் வைத்திருக்க வேண்டும் என கம்பஹா மாவட்ட சுகாதார குழு தலைவரும், விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சருமான கிரஷான்த அபேசேன நேற்று நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் கூறினார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
நான் கம்பஹா மாவட்டத்தில் சகல வைத்தியசாலைகளுக்கும் விஜயம் செய்கிறேன். நோயாளர்களுக்கு தேவையான முடியுமான வசதிகளை செய்து கொடுக்க முயற்சி எடுத்துள்ளேன்.
நீர்கொழும்பு வைத்தியசாலை சுகாதார அமைச்சின் கீழுள்ளது. இங்கு சிரி ஸ்கேன் மெஷின் இல்லை என்பதை அறிந்துகொண்டேன். இது தொடர்பாக நான் சுகாதார அமைச்சுடன் பேசியுள்ளேன். கட்டாயமாக அடுத்த வருடம் ஆரம்பத்தில் இதனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.
இந்த வைத்தியசாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அண்மையில் அமைந்துள்ளதனால், ஏதாவது விமான விபத்துக்கள் ஏற்பட்டால் இங்குதான் வரவேண்டி உள்ளது. அதனால் இவ் வைத்தியசாலையை உயர் நிலையில் வைத்திருப்பது அத்தியவசியமாகும். குறைபாடுகள் இருக்கின்றன. அவற்றை படிப்படியாக நிவர்த்தி செய்வோம். தாதியர் மற்றும் சிற்றூழியர் பற்றாக்குறை நிலவுகின்றன. அவர்களை நியமிப்பதற்கான ஒரு பொறிமுறை உள்ளது. அதன்படி அதனையும் தீர்த்துக்கொள்வோம்.
புதிய கட்டிடத்திற்காக திட்டமிடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் கூறினார். அதனை நிர்மானித்தால் பெரும்பாலான குறைபாடுகள் நீங்கிவிடும் என்றார்.
நீர்கொழும்பு ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, வைத்தியசாலை பணிப்பாளர் புஷ்பா கம்லத்கே ஆகியோரும் இதில் இணைந்துகொண்டனர்.