தனது தந்தையின் ஒரே ஆசை, தான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராகி இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதுதான் என்றும், அந்த ஆசையை நிச்சயமாக நிறைவேற்றுவேன் என்றும் இளம் கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகே தெரிவித்தார்.
தனது தந்தையின் திடீர் மறைவு காரணமாக ஆசியக் கிண்ணத் தொடருக்கு இடையில் நாடு திரும்பிய துனித் வெல்லாலகே, இன்று (20) காலை இலங்கை அணியுடன் மீண்டும் இணைவதற்காக நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு இவ்வாறு கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த துனித்,
“எனது சிறு வயதிலிருந்தே என் தந்தையிடமிருந்து மிகுந்த ஆதரவு கிடைத்தது. நான் ஒரு சிறந்த வீரராகி நாட்டிற்காக விளையாட வேண்டும் என்பதே அவரது ஒரே ஆசை. அந்த ஆசையை நான் நிச்சயமாக நிறைவேற்றுவேன். ஆசியக் கிண்ணத்தில் எங்களுக்கு இன்னும் போட்டிகள் உள்ளன. எனது அணிக்கு நூறு சதவீத பங்களிப்பை வழங்குவேன் என்று நம்புகிறேன்.சனத் சார், அணித்தலைவர் சரித் அண்ணா உள்ளிட்ட அணி மற்றும் இலங்கையில் உள்ள அனைவரிடமிருந்தும் எனக்கு மிகுந்த ஆதரவு கிடைத்துள்ளது. அது எனக்கு ஒரு பெரிய பலம். எனவே, இத்தகைய சவாலான சூழ்நிலையில் எனக்கு வழங்கப்பட்ட ஆதரவுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனது சிறு வயதிலிருந்தே, என் தந்தை காலை முதல் இரவு வரை என் கிரிக்கெட் வாழ்க்கைக்காக எனக்குப் பின்னால் நின்று ஆதரவளித்தார். அவரது தியாகத்தால்தான் நான் இன்று நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். என் தந்தையின் ஆசைகளை நான் அறிவேன். அவருக்காக அவை அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்று நம்புகிறேன்,” என்றார்.