அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கங்களின் பேரவையின் (YMMA) 75வது ஆண்டு மாநாட்டில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,
“கல்வி, இளைஞர் அபிவிருத்தி, அனர்த்த நிவாரணம் , உதவிகள் தேவைப்படுகின்ற பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கு வலுவூட்டுதல், சமூக நலன்புரி சேவை ஆகியவற்றில் முன்னெடுக்கப்படும் செயல்திட்டங்கள் மூலம், இந்த அமைப்பு ஆயிரக்கணக்கான தனிநபர்களுக்கும் சமூகங்களுக்கும் ஆதரவளித்து வருகின்றது.‘பெண்களை வலுவூட்டல் திட்டம், ‘மீண்டும் பாடசாலைக்குத் திட்டம்’ போன்ற முயற்சிகள் மூலம் முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவளிப்பதில் YMMA முக்கியப் பங்காற்றி வருகின்றமை பாராட்டத்தக்கது. இவ்வாறான செயல்திட்டங்கள் தனி மனித வளர்ச்சிக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த சமூகத்தின் வளர்ச்சிக்கும் காரணமாக அமைகின்றன.உங்களது உறுப்பினர்கள் மற்றும் கிளைகளின் இந்த வருடாந்த அங்கீகாரமானது, மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்காகத் தமது நேரத்தையும், ஆற்றலையும், வளங்களையும் வழங்கியவர்களின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.75 ஆண்டுகால சேவையைப் பற்றி நாம் சிந்திக்கும் போது, எதிர்காலத்தைப் பற்றியும் பார்க்க வேண்டும். வேலையின்மை மற்றும் சமூகப் புறக்கணிப்பு உட்பட இளைஞர்கள் இன்று எதிர்கொள்ளும் சவால்களுக்கு, அரசாங்கம், சிவில் சமூகம் மற்றும் YMMA போன்ற அமைப்புகளுக்கு இடையில் வலுவான கூட்டுறவுத் தேவைப்படுகின்றன.குறிப்பாக சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளை முடித்த பின், பெண் பிள்ளைகளுடன் ஒப்பிடுகையில் ஆண் பிள்ளைகளில் பெருமளவானோர் உயர் கல்வியை விட்டு விலகிக் கொள்கின்றமை தரவுகள் அடிப்படையில் பார்க்கின்ற பொழுது தெரிய வருகின்றது. இதனால் இளம் வயதில் இருக்கும் ஆண்கள் உயர் கல்வி மற்றும் தொழில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆகையினால் அவர்களுக்கான வழிகாட்டுதல், ஊக்குவித்தல் ஆகியன மூலம் இளைஞர்களுக்கு அவர்களது கல்விப் பயணத்தைத் தொடர ஆதரவளிக்க வேண்டியது கட்டாயத் தேவையாக இருக்கின்றது.ஆகையினால் பொறுப்பும், திறமையும் மிக்க இளைஞர் சமுதாயத்தினை உருவாக்குவதில் YMMA இன் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை நான் பாராட்டுகிறேன். இந்த முயற்சிகளின் மூலமே சமத்துவம், புரிதல் மற்றும் சம வாய்ப்புகள் மிக்க சமூகத்தை உருவாக்குதல் சாத்தியமாகும், எனத் தெரிவித்தார்.