2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், நாடு முழுவதும் 40,633 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த காலப்பகுதியில் டெங்கு நோயினால் 22 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக டெங்கு நோய்க் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.இவர்களில் அதிகளவானோர் மேல் மாகாணத்திலேயே கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் டெங்கு நோய்க் கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் பிரஷிலா சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.அத்துடன், அதிக ஆபத்துள்ள மாவட்டங்களாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, குருநாகல், இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய 11 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் இரத்தினபுரி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் மருத்துவ நிபுணர் சுட்டிக் காட்டியுள்ளார்.இந்தநிலையில், நுளம்பு பெருக்கமடைவதை தவிர்த்து, சுற்றுப்புறங்களைச் சுத்தமாக வைத்திருக்குமாறும் டெங்கு நோய்க் கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் பிரஷிலா சமரவீர பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.