ஜப்பானில் வாகன விலை குறைந்ததையடுத்து, இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை அதிகபட்சமாக ரூ.1.5 மில்லியன் வரை குறைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் (VIAL) தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.
அங்கீகரிக்கப்படாத வாகன இறக்குமதிகள் காரணமாக, பதிவு செய்யப்படாத வாகனங்கள் சந்தையில் குவிந்துள்ளன என்றும், இதனால் விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2025 ஜனவரி முதல் ஓகஸ்ட் மாதம் வரை தனிப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக 705 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளன. “விலை மாற்றங்களின் அடிப்படையில், பதிவு செய்யப்படாத ஹோண்டா வெசல் Z Play 2025 SUV தற்போது ரூ. 23.5 மில்லியனுக்கு விற்கப்படுகிறது. முன்னர் இது ரூ. 25.5 மில்லியனாக இருந்தது. டொயோட்டா யாரிஸ் (Toyota Yaris)ரூ. 11.5 மில்லியனிலிருந்து ரூ. 10.5 மில்லியனாக குறைந்துள்ளது. சுசுகி ஆல்டோ ஹைப்ரிட் (Suzuki Alto Hybrid) தற்போது ரூ. 7.9 மில்லியனிலிருந்து ரூ. 7.3 மில்லியனாகவும், சுசுகி வாகன் ஆர் (Suzuki Wagon R) ரூ. 7.8 மில்லியனிலிருந்து ரூ. 7.3 மில்லியனாகவும் குறைந்துள்ளது,” என மெரிஞ்சிகே குறிப்பிட்டார். மேலும் டொயோட்டா தற்போது இலங்கையின் இறக்குமதி வாகனச் சந்தையில் முன்னணியில் உள்ளது. ரைஸ் மற்றும் யாரிஸ் மொடல்கள் விற்பனையில் முதலிடத்தைப் பிடித்துள்ளன எனவும் அவர் தெரிவித்தார். சிறிய வாகன பிரிவில் நிசான் (Nissan) பிராண்ட் விற்பனை வேகமாக உயர்ந்துள்ளதாகவும், ஆனால் சுசுகி வாகன் ஆர் (Suzuki Wagon R) மொடலில் புதிய பதிப்புகள் அறிமுகப்படுத்தப்படாததால் அதன் விற்பனை குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, மின்சார வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, தற்போது ஹோண்டா, வெசல் SUV பிரிவில் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளதாக மெரிஞ்சிகே கூறினார்.