அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது கன்பெராவில் இன்று பிற்பகல் 1.45 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
அடுத்தாண்டு உலகக் கிண்ணம் நடைபெறவுள்ள நிலையில் பலமான எதிரணியுடன் தம்மை பரிசோதித்துக் கொள்வதற்கான சந்தர்ப்பமாக இத்தொடர் காணப்படுகின்றது.
ஒருநாள் தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் நிதிஷ் குமார் ரெட்டி களமிறங்கிய நிலையில் இத்தொடரில் அவர் களமிறங்காமல் ஷிவம் டுபேயும் அணியில் இருக்கின்ற நிலையில் அவரின் இடத்தை ஹர்ஷித் ரானா எடுத்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அக்ஸர் பட்டேல், வொஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் குழாமில் இடம்பெற்றுள்ள நிலையில் சுந்தர் தவிர்ந்த மற்றைய மூவரும் அணியில் இடம்பெற்றாலும் ஆச்சரியப்படுவதுக்கில்லை. மற்றும் அபிஷேக் ஷர்மா அவுஸ்திரேலிய ஆடுகளங்களை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார் என்பதும் தொடரின் போக்கை தீர்மானிக்கும்.
மறுபக்கமாக ஜொஷ் ஹேசில்வூட் மாத்திரமே முதன்மை பந்துவீச்சாளராக காட்சியளித்தாலும் நாதன் எலிஸ், ஸ்கேவியர் பார்ட்லெட், மத்தியூ கூனுமென் ஆகியோரையும் குறைத்து மதிப்பிட முடியாதென்பதுடன் ஸ்டொய்னிஸும் பங்களிப்பை நல்குவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரெவிஸ் ஹெட், டிம் டேவிட், ஸ்டொய்னிஸ், ஜொஷ் இங்லிஸ் உடன் மிற்செல் ஓவன், மத்தியூ ஷோர்ட், ஜொஷ் பிலிப், பென் மக்டர்மூட் என மக்ஸ்வெல் ஆரம்பத்தில் இல்லாதபோதும் பலமானதாகவே துடுப்பாட்ட வரிசை காணப்படுவதுடன் அணித்தலைவர் மிற்செல் மாஷின் அண்மைய இருபதுக்கு – 20 போட்டி பெறுபேறுகள் அதிரடியாகக் காணப்படுகின்றன.