அவுஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரானது பேர்த்தில் நாளை காலை 7.50 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் இம்முதலாவது போட்டியில் காயம் காரணமாக அவுஸ்திரேலியாவின் அணித்தலைவர் பற் கமின்ஸ் மற்றும் சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் ஜொஷ் ஹேசில்வூட் இல்லாதபோதும் அவுஸ்திரேலியாவை வீழ்த்துவதற்கு மிகப் பெரும் கூட்டுப் பெறுபேற்றொன்றை இங்கிலாந்து வெளிப்படுத்த வேண்டியுள்ளது.
இங்கிலாந்தின் அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸிடமிருந்து சகலதுறைப் பெறுபேறுகள் எதிர்பார்க்கப்படுவதுடன், சிரேஷ்ட வீரர் ஜோ றூட்டிடமிருந்தும் பெரிய இனிங்ஸ்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
அநேகமாக ஜொஃப்ரா ஆர்ச்சர், குஸ் அட்கின்ஸன், மார்க் வூட், பென் கார்ஸ் என்ற நான்கு பேர் கொண்ட வேகப்பந்துவீச்சுக் கூட்டணியுடனே வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானதாக இருக்குமென நம்பப்படும் பேர்த்தில் இங்கிலாந்து களமிறங்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
மறுபக்கமாக அவுஸ்திரேலியாவில் உஸ்மான் கவாஜாவின் போர்மும் உற்று நோக்கப்படுவதுடன், இப்போட்டியில் ஜேக் வெதர்லான்ட் அறிமுகத்தை மேற்கொள்கின்ற நிலையில் எதிர்வரும் போட்டிகளில் முன்வரிசையில் மிற்செல் மாஷ் களமிறங்கக்கூடிய வாய்ப்புகளும் காணப்படுகின்றன.
உள்ளூர்ப் போட்டிகளில் பிரகாசித்த பிரெண்டன் டொக்கெட்டும் அறிமுகத்தை மேற்கொள்கின்ற நிலையில் கமின்ஸ், ஹேசில்வூட்டை மிற்செல் ஸ்டார்க், ஸ்கொட் போலண்டை உள்ளடக்கிய அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சுக் கூட்டணியானது பெரும்பாலும் தவறவிடாதென நம்ப்படுகின்றது.