• Fri. Nov 28th, 2025

இருபதுக்கு இருபது போட்டிகளுக்கு இலங்கை இணை அனுசரணை

Byadmin

Nov 26, 2025

2026 ஆம் ஆண்டு இருபதுக்கு இருபது கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகளை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தவுள்ளதோடு, அதன் ஊடாக இந்நாடு தொடர்பாக சர்வதேச அளவில் கிடைக்கும் விளம்பரம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை இணைந்து நடத்தவுள்ள 2026 இருபதுக்கு இருபது உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (25) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிகளின்படி, குறித்த போட்டிகளை மிகவும் சிறப்பாக இந்நாட்டில் நடத்துவது தொடர்பிலும் இந்நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டுப் பார்வையாளர்கள் எதிர்கொள்ளும் குடிவரவு மற்றும் குடியகல்வு பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், இந்தப் போட்டி நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய சாதகமான விளைவுகள் மற்றும் அதன் ஊடாக கிடைக்கும் புதிய பொருளாதார வாய்ப்புகள் குறித்தும் இங்கு கலந்துரைாயடப்பட்டது.

இந்தப் போட்டிகள் கொழும்பு மற்றும் பல்லேகெலேயில் உள்ள மூன்று மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகளுக்கு Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் பங்களிப்புகளைப் பெற்றுக்கொள்வது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

2026 ஆம் ஆண்டு இருபதுக்கு இருபது உலகக் கிண்ணப் போட்டிகள் பெப்ரவரி 07 முதல் மார்ச் 08 வரை நடைபெறும். இந்தப் போட்டியில் இருபது நாடுகள் பங்கேற்கவுள்ளதோடு, அந்த நாடுகளுக்கு இடையே சுமார் இருபது போட்டிகளை இலங்கையில் நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் திட்டமிட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ( ஓய்வு பெற்ற) எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் பணிப்பாளர் (விளையாட்டு) லெப்டினன்ட் கேணல் அநுர அபேவிக்ரம, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸ்ஸல் அபோன்சு ஆகியோருடன் துறை சார் அமைச்சுகளின் அதிகாரிகள், இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சார்பில் அதன் செயலாளர் பந்துல திசாநாயக்க மற்றும் பொருளாளர் சுஜீவ கொடலியத்த மற்றும் பாதுகாப்புப் பிரிவுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *